Tuesday, August 23, 2011

சந்திப்பின் அலைகள்

 என் பறவையின் சிறகுகள் 
 காற்றாலானவை 
 உன் படகின் துடுப்புகள்
 நீராலானவை

சந்திக்கும் கணங்களில் எல்லாம்
எழும் நம் அலைகளுக்கு
பறக்கவும் தெரியும்
நீந்தவும் தெரியும். 
 

Sunday, August 21, 2011

ஒன்னும் புரியலடா சாமி...

 அது அல்ல இது
 இதுவும் அல்ல அது
 இது உனக்கு அது
 அது எனக்கு இது.  




Saturday, May 14, 2011

நிலவு சாட்சியாய்...


கடவுள் செதுக்கிவிட்ட
கூரிய நகங்களை
முதுகில் பதித்து வீழ்த்தி
கழுத்தைக் கவ்விய 
புலியின் கண்களில் ஒளிர்கிறது
விண் வெறித்த மான் விழி நிலவு.

மிளா அருந்திக்கொண்டிருந்த
நெளிந்த நிலாவுக்குள்ளிருந்து
வெளிவந்த முதலையதை
இழுத்துச் சென்று மறைந்தது
மீண்டும் நிலவுக்குள்.

ஒவ்வொரு மாத்திரையாய்
சர்க்கரை தடவி விழுங்கிய பெண் 
மெல்ல மெல்ல செத்துப்போன 
இரண்டுமணி நேரமும் 
பண்பலையில் ஒளிபரப்பான
நிலவுப் பாடல்கள்
அறையை நிறைத்து 
அவள் விழிகளில் வெறித்திருந்தது 

பக்கத்து ராணுவன் 
சுட்டதில் இறந்தஎம்
விசைப்படகு மீனவனின்
விரிந்த விழிகளில்
இறுதியாய் தெரிந்தது
மோன முழு நிலவே.

நிலவைப் பற்றிய 
பாடத்தின் நடுவே
குறிவைத்து
பள்ளிக் கூரை பிரித்து விழுந்த 
ஷெல்களில் சிதறிய
குழந்தைகளின் முகத்திலெல்லாம்
ரத்தத்துடன் 
நிலாச் சிதறல்களும்.

கடவுளைக் கொன்றுவிட்டு 
சூரியனில் விழுந்து 
தற்கொலை செய்துகொண்டதாக வந்த
நிலவைப் பற்றிய 
அதிகாலைச் செய்தி 
அதிர்ச்சியோ ஆச்சர்யமோ தரவில்லை
இன்னும் கொஞ்சம் 
இனிப்பாக இருந்தால் நன்றாயிருக்குமென 
தேநீருக்குச் சர்க்கரை தேடுகிறேன்.

புறக்கணிக்கப்பட்ட பொறிகள்.



பறவைகள் அரிதான
நகரத் தெருக்களில்
திடும்மெனத் தென்படுகின்றன
புறக்கணிக்கப்பட்ட பொறிகள்.

உடைந்தும்
அழுக்கேறியும்
தனிமை சூழ்ந்தும்
குப்பைத்தொட்டி ஓரங்களிலும்
இருண்ட சந்துகளிலும்
கைவிட்ட கடவுள்களை   
மௌனமாய் வெறித்துக்கொண்டும்.   

சுமந்த பாரங்களை
இருந்த உறவுகளை
இழந்த பெருமைகளை
இழைக்கப்பட்ட துரோகங்களை
இக்கணம் எண்ணிக்கொண்டுமிருக்கலாம்.

சம்பந்தப் பட்டவர்கள்
சாலைகளைக் கடக்கையில்
பார்க்காமலா 
இருப்பார்கள்?

கண்டதும்
கண்ணில் துளிர்த்த
துளி கண்ணீரைத் தொட்டுணர்ந்தே
கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது
முற்றிலும் இயந்திரமாகிவிடாத 
இதயமிருப்பதை இன்னும். 


Monday, March 28, 2011

மலர்கள் மலரும்

ஒருவழிச் சாலையாகிவிட்ட
இருவழிச் சாலையொன்றில்
இருவரும் கடந்து செல்கிறோம்
எதிரெதிரே.

இன்னுமிருக்கும்
கண்ணுக்குப் புலப்படாத
பழைய தடுப்புச் சுவரில்
மலர்ந்திருக்கிறது
மழுங்கிய முட்களுக்கிடையில்
புதிய பூக்கள்.

ஒரு துரோகம்
ஒரு உதவி
ஒரு வாதை
ஒரு காதல்
ஒரு ஏமாற்றம்
ஒரு நம்பிக்கை
ஒரு குற்றவுணர்ச்சி
ஒரு தியாகம்
ஒரு கோபம்
ஒரு கண்ணீர்
அனைத்தின் எடையும்
கணந்தோறும் மாறுகின்ற
காலத்தின் நிரந்தர தனுசில்
நிலையற்ற முள்ளென
அதிர்கிறதுறவுகள்.

உன்னோடு போரிட்டு
என்குருதி சிதறிய மண்ணில்
புண் ஆறிப் பூத்திருக்கும்
உறுத்திய முட்களைக் கடந்த
புத்தம் புது மலர்கள்
உன் மண்ணிலும் மலரும்
காத்திருப்போம்... 

Friday, March 25, 2011

என்னமாதிரியான காலத்தில் வீழ்கிறோம்-உயிர்மை பதிப்பக வெளியீடு 10000001

      உயிர்மை பதிப்பகத்தின் 325 வது  வெளியீடாக புத்தக கண்காட்சி வசூலை முன்வைத்து வெளியிடப்பட்ட கார்த்திகா அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பு "இவளுக்கு இவள் என்றும் பேர்". மே 2008 முதல் செப்டம்பர் 2010 வரையிலான கவிஞரின் 77 கவிதைகள் நேர்த்தியான வடிவமைப்புடன், அழகான அட்டைப் படத்துடன், மனுஷ்யபுத்திரன் அவர்களின் சிலாகிப்பான பின்னட்டை உரையுடன், கவிஞர் அவர்களின் இயற்கையில் பாதி மறைந்த புகைப்படத்துடன் 50௦ ரூபாய்க்கு வெளியிடப்பட்டுள்ளமைக்கு உயிர்மை பாராட்டுக்களைப் பெற தகுதி பெற்றுக்கொள்கிறது.

     கார்த்திகா அவர்கள் வழி நெடுக அம்மா அப்பா, சிறுமிகள் நிறைந்த என் தெரு, விடுதிக் குறிப்பு-3, ஏன் அப்படி, உருகும் சொல், ஒவ்வொன்றும் ஒன்றும், முள்ளின் மனம், ஆரஞ்சுப் புன்னகை, மரபு வழிக் கதைகள், நத்தையின் சலனம், இவளுக்கு இவள் என்றும் பேர், தனிச்சுற்றுக்கு மட்டும், ரகசிய வாசல்கள், கனவில் வந்த தூக்கம், பொன்மாலைப்பொழுது ஆகிய கவிதைகளில் இன்னும் பல வருடங்கள், தீவிர உழைப்புக்குப் பின் நல்ல கவிதைகளை இவர் எழுதக்கூடும் என்ற சிறு நம்பிக்கை தருகிறார். இன்னும் நல்ல கவிதைக்கு அவர் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதால் உற்சாகமூட்டக்கூடிய பாராட்டுக்களை மட்டும் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 
          
     பெரும்பாலும் 4 அல்லது 5 வரிக்  கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பு ஒரு சிறிய பயணத்தின் பாதி நேரத்தில் படித்துவிடக்கூடியதாய் உள்ளது.
மிகச் சாதாரண வழமையான மழை, மழலை, விடுதிவாழ்க்கை, இயற்கை என சலிப்பூட்டக்கூடிய கருப்பொருள்கள், அதைவிட சலிப்பூட்டக்கூடிய வழமையான பார்வைகள் என வாசிப்பின் இறுதியில் அயற்சியும், கோபமும், சோர்வும் வருகிறது உயிர்மையின் மேல். 

      மனுஷ்யபுத்திரனின் பின்னட்டை உரை மற்றும் புத்தக நேர்த்தி, உயிர்மையின் இலக்கியத்தரம் என்ற அத்தனை பொய்களும் சாயம் போய் பல்லிளிக்கிறது வாசிப்பின் இறுதியில். பதிப்பகங்கள் வெளியிட தேர்வு செய்யும் படைப்புகளுக்குப் பின்னாலுள்ள அரசியலும், சிலாகிக்கும் பின்னட்டை உரைகளும் எரிச்சலூட்டுகிறது. ஆனால் ஒரு பதிப்பாளராக மனுஷ்யப் புத்திரனின் வியாபார யுக்தியும், அதற்கு இலக்கியத்தரம், முன்னணி இலக்கியக் கவிஞர் என்கிற அவரைப் பற்றி வாசகனின் பொதுப் புத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மதிப்பீடுகளை அவர் உபயோகப்படுத்திக் கொள்ளும் மதி நுட்பத்தையும் நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும்.

       இன்னும் இதுமாதிரி வீட்டுக்கு ஒருத்தராச்சும் பழைய டைரில, நோட்ல எப்படியும் கவிதை எழுதி வச்சுருப்பாங்க சார். நீங்க ஒவ்வொண்ணா வெளியிட்டாலும் கொறஞ்சுது ஒரு கோடி புத்தகங்கள, உங்க ஒரு கோடி பின்னட்டை விமர்சனத்தோட போடலாம். உங்க அந்த பின்னட்டை விமர்சங்களை எல்லாம் தொகுத்து என்னமாதிரியான காலத்தில் 
வீழ்கிறோம்னு தனி புத்தகமா உயிர்மை பதிப்பக வெளியீடு 10000001 ன்னு கெத்தா தலைகாணி சைசுக்கு நேர்த்தியா போடலாம்...டலாம்...லாம்... ம்.  

இப்பிடியே மைண்டைன் பண்ணுங்கப்பு, உங்க கல்லா புல்லா களகட்டும்.     

Monday, March 7, 2011

க(ணி\ன்)னிக் காமம்

செக்சுக்கு பதிலாய்
மேல் என மாற்றி
இளம்பெண்களுடன் அரட்டையடிக்க
இத்தனை ஆண்டுகளாய்
முட்டிக்கொண்டிருந்த
மீசை தாடி குறி நீண்டு
வளர்கிறதுமுளைத்து
முளைத்த முலைகள் 
சுருங்க.

Saturday, February 26, 2011

கருக்கல் வெளுக்கிறது




மதிய வெய்யிலில் 

மடை மாற்றச் சென்றுவிட்டு திரும்புகையில் 
சட்டெனக் கருத்து நனைக்கிறது இடியும் மின்னலும்

சித்தப்பா திருமணத்தில் சண்டையாகி
பேச்சுவார்த்தை நின்றுவிட்ட
மாமாவின் வீட்டருகே தயங்கியபடி 
மழையில் நனைந்து ஒதுங்க 
மிரண்டு குரைக்கிறது புதிய அல்சேசன் நாய்க்குட்டி

வெளிவந்த முறைப்பெண் முத்தழகு
உள்ளோடி குடையுடன் வந்து 
வாங்க மாமாவென கூட்டிப் போகிறாள் 
வற்புறுத்தி வீட்டுக்குள்

என்ன மாப்ளே வேத்தாள் மாதிரி வெளியவே நின்னுட்டீங்க
எளவு இந்த வானம் மாதிரிதானே மனசும்
மழையும் கோபமும் சட்டுன்னு வந்துட்டாலும் கஷ்டம்
வராமயே இருந்தாலுங் கஷ்டம்
சொல்லியபடியே எனக்குப் பிடித்த கறுப்புக் காப்பி போட்டு  
சொம்பில் நீட்டுகிறாள் அத்தை

கொஞ்ச நேரம் மழையில நின்னா
உங்க தலைகுள்ள  இருக்கிறது கரைஞ்சிடும் மாப்ளே எனக் 
கேலியுடன் தத்துவமும் உதிர்த்துச் சிரிக்கிறார் மாமா
உதடு கடித்துச் சிரிப்பை அடக்கியபடி 
ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டிருக்கிறாள் முத்தழகு
  
உறவுகளின் கதகதப்பில் குளிர் காய்கிறது உடலும் மனமும்
உள்ளும் புறமும் சூழ்ந்திருந்த கருக்கல் 
வெளுக்கிறது மெல்லமெல்ல.


Sunday, February 13, 2011

சில காதல் கவிதைகள்


1.பெரும் மழை   

விழிகளின் ஜன்னல்களில் 
தயங்கிப் பார்க்கிறது  
இதழ்களின் துடிப்புகளில்
தவித்து ஊமையாகிறது 
விரல்களின் நடுக்கங்களில்
ஒளிந்து மறைகிறது 
கால்களின் தயக்கங்களில் 
தேங்கி நிற்கிறது
ஒரு உதறு உதறிவிட்டுத்தான் போயேன் 
பெரும் காதல் மழையை 
நனைந்த சிட்டுக்குருவியென என்மேல்.

2.காதலென்று 

மௌனத்தின் உதடுகளால் பேசுகிறேன்
வெட்கத்தின் காதுகளால் கேட்கிறாய்
நான் சொல்லத் தயங்கியதும்
நீ கேட்கத் தவித்ததும்
இச் சிறப்பிதழில் அச்சேறுகிறது
ஆதி மொழியில் காதலென்று. 

3.ஆதிக்கனி 

கவனிக்காமல் விட்டுவிடுவார்களோயென்ற கவலையில்
கடிக்காதேயென்று கைகாட்டிய கடவுளின் கருணையால் 
ஆதிப்பெண் கடித்த பாதிக்கனி 
இன்னும் இனிக்கிறது உன் இதழ்களில். 

4.ஆறுதலற்றவன் சொல்லும் ஆறுதல்

கல்லூரிப் பேருந்துக்காக காலையில் காத்திருக்கையில்
நீ பேசிச் சிரிக்கும் கொன்றை மரம்
பூக்களுடன் இலைகளையும் உதிர்த்துவிட்டு... 

எப்பொழுதும் நீ 
மடியில் அமர்ந்து தோளில் சாய்ந்து கொள்ளும் 
ஜன்னலோர முதல் இருக்கை
தாங்கமுடியாத பாரத்துடன் வெறுமையாய்...

இறங்கியதும் நீ தலைகுனிந்து ஒருகணம்
தினம் வணங்கும் மரத்தடிப் பிள்ளையார்
தெருவையே  வெறித்தபடி...

செமெஸ்டர் லீவ் முடிந்து சீக்கிரம் வந்துவிடுவாயென
எல்லோருக்கும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறேன் 
இதுவரை நீ ஒருபொருட்டாய் மதித்திடாத நான்.

5.அம்மாவுக்கு எல்லாந் தெரியும்

எல்லோரையும் பார்க்க ஆசைப்பட்டு
நோட்டுவேனுமென்று நீ வீட்டுக்கு வந்துபோன இரவு
நல்ல லட்சணமான பொண்ணுதாண்டா       
மொதல்ல ஒழுங்கா படிச்சு ஒரு வேலைய தேடிக்க கண்ணு
உன்விருப்பத்துக்கு யாரும் குறுக்க நிக்கமாட்டோமென்றஅம்மாவிடம் அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா என்றதுக்கு சும்மார்றா மொசப்புடிக்கிற  நாய மூஞ்சியப்பாத்தா தெரியாதா என்றாள்
உன்முகமா என்முகமா யார்மூஞ்சி காட்டிக் கொடுத்ததென்று 
நானும் கேட்கவில்லை அம்மாவும் சொல்லவில்லை.

6.சிறகு நனைந்த தேவதை சொன்னது 

ஓரப்பார்வையில் மின்னல் மின்ன 
இதயக் கூட்டுக்குள் இடி இடிக்க 
நீ மழையாய் வந்தாய்

கண்களில் கானல் காய 
நெஞ்சுக்குள் தாகம் பாய 
நான் வெயிலாய் வந்தேன்

நாம் சந்திப்பில் பிரிந்த ஒளியின் வண்ணங்களை 
எல்லோரும் வானவில் என்க
இல்லையிது காதலென்று காதோடு சொல்லிப் பறக்கிறது
சிறகுகள் நனைந்த தேவதையொன்று.
 

Tuesday, February 8, 2011

ஒரு கறுப்புப் பூனையும் ஆறு கோப்பை மதுவும்

ஒரு பூனையின் எலும்புகள்
அவ்வளவு இலகுவானது
நீதிமன்றங்களின் சட்டங்கள் போல
நவீன இலக்கியம் போல
உயிர்மெய்யின் "லு" போல
பல கோணங்களில் வளையக்கூடியது

ஒரு பூனையின் உடல்
அவ்வளவு மென்மையானது
பிறந்த குழந்தையின் பிருஷ்டம் போல
வளர்ந்த பெண்ணின் மார்பைப் போல
காதலியின் கன்னங்களைப் போல
தொட்டுப் பார்க்கத் தூண்டுவது.

ஒரு பூனையின் கண்கள்
அவ்வளவு உயிர்ப்பானது
பேரழகு கொண்ட கள்ளக் காதலி போல
அசையும் பாதரசத்தைப் போல
சிமிட்டும் நட்சத்திரத்தைப் போல
இரவிலும் ஒளிரக் கூடியது

ஒரு பூனையின் உதடுகள்
அவ்வளவு சிவப்பானது
பருவமடையாத சிறு பெண்ணின் யோனி போல
பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைப் போல
கொலை செய்யப்பட்டவனின் ரத்தத்தைப் போல
ரகசியமாய் முத்தமிடத் தூண்டுவது.

ஒரு பூனையின் குரல்
அவ்வளவு இனிமையானது
பெண்குழந்தையின் சிரிப்பு போல
ஆண் குழந்தையின் அழுகை போல
மனைவியின் சிணுங்கல் போல
அம்மாவின் ஆசிர்வாதம் போல
நேரடியாய் இதயம் நுழைவது.

ஒரு பூனையின் இருப்பு
அவ்வளவு நியாயமானது
பறவையின் சிறகு போல
கடவுளின் பல கரங்கள் போல
பூக்களின் தேன் போல
தவிர்க்க இயலாதது.

கடவுளும் உறங்கிவிட்ட இந்த சபிக்கப் பட்ட இரவில்
என் காரின் குறுக்கே பாய்ந்த கறுப்புப் பூனையின் உயிரும்
அவ்வளவு அபூர்வமானது
கடந்துவிட்ட அந்த நொடியைப் போல
அழகிய முதியவளின் இளமையைப் போல
கருக்கலைப்பு செய்யப்பட்ட குழந்தையைப் போல
கதறி அழுதாலும் திரும்ப வராதது.

இந்தப் பொன்னிற மது
அவ்வளவு ஆச்சர்யமானது
மந்திரவாதியின் மந்திரக்கோல் போல
நல்ல புணர்ச்சியொன்றின்  உச்சத்தைப் போல
கடுந் தவத்துக்குப்பின் அடைந்த உன்மத்தம் போல
தற்கொலை செய்து கொண்டவனின் இறுதி நொடி போல
நூறு பூனைக் குட்டிகளின் மூச்சுப் போல
சூடானது இதமானது மயங்கவைப்பது
நம்மை நாமே மன்னிக்குமளவு கருணையேற்றுவது
எல்லாம் வல்ல கடவுளாக்குவது

ஆறாவது கோப்பையின் இறுதியில்
தானாக தரையில் விழுந்து
நானாக சிதறுகிறேன் நூறு பூனைகளாக
குறுக்கே பாய்ந்த கறுப்புப் பூனையென
உருமாறிய என்குறி 
"i am back" என ஆங்கிலத்தில் கத்தியபடியே
அடுத்த அறைக்குள் நுழைகிறது 
அது பிள்ளைகள் உறங்கியபின்
பின்னிரவுக் காமத்துக்காக காத்திருக்கும்
என் மனைவியின் படுக்கை அறை.

Monday, February 7, 2011

சிறுமியிடம் மாட்டிக்கொண்ட வறுமையும், மனிதாபிமானமும்


தட்டைத் தட்டியெழுப்பிய
தாயின் தாளத்துக்கு 
இடுப்பசைத்து மெலிதாய் ஆடியபடி
கழுத்தை நெரித்துத் தொங்கிய 
கம்பி வளையத்தை
தோள்களைக் ஒடுக்கி,
நெஞ்சைக் குறுக்கி, 
வயிற்றைச் சுருக்கி,
கால்வழியேயெடுத்து
கக்கத்தில் வைத்துக்கொண்டு 
சில்லறைத் தட்டை 
தாயிடம் கொடுத்துவிட்டு 
தவழும் தம்பியுடன் 
சிரித்து விளையாடுகிறாள் 
வித்தை காட்டிய சிறுமி.
கழுத்தை நெரித்து  விடவேண்டுமென 
கங்கணங் கட்டி வந்த வறுமையும்,
உதவி விட்டதாய்ச் சத்தமிடும் 
சில்லறைகளின் மனிதாபிமானமும் 
மாட்டிக்கொண்டு முழிக்கின்றன  செய்வதறியாமல், 
கக்கத்தில்  வைத்திருந்த கம்பி வளையமாய்.

-நன்றி திண்ணை இணைய இதழ்.
-நன்றி பதிவுகள் மாத இணைய இதழ்     

Wednesday, February 2, 2011

பதங்கமாதல்


சாத்தானால் ஆசீர்வதிக்கப் பட்ட இந்த
சாமத்தின் நடுவினில்
சுழலும் மின்விசிறியின் சிறகுகளிலிருந்து
அறைமுழுதும் இறங்கிப் பரவுகிறது
இறந்த காலத்தின் வெம்மை

இரவு விளக்கொளியில்
சுவற்றில் நெளியுமென் நிழல்
இருண்டு கிடக்கிறது
ஒளியைப் பற்றிய நம்பிக்கைகள் பொய்த்து

அடைக்கப் பட்ட ஜன்னலுக்கு வெளியே
பாடிச் செல்லும் பைத்தியத்தின் குரல்
ஏனோ போதை ஏற்றுவதாகவும்
கிளர்ச்சி யூட்டுவதாகவும் இருக்கிறது

ஆழ்ந்து தூங்கும் அதிகாலையில்
உங்கள் ஜன்னலுக்கு வெளியே பாடும் குரல்
இன்று ஒரு பறவையுடையதாகவும்
நாளை என்னுடையதாகவும்
பிறிதொருநாள் உங்களுடையதாகவும் இருக்கலாம்.

-நன்றி உயிரோசை வார இணைய இதழ்.

Sunday, January 30, 2011

காட்சியில் எனது கவிதைத் தொடர்

இந்தவாரம் முதல் காட்சி இணைய வலைப் பூவில் எனது கவிதைகள் தொடராக வெளிவருகிறது. இயக்குனர் ராம், சக படைப்பாளி அவனி அரவிந்தன், மற்றும் காட்சி குழுவினருக்கு நன்றிகள். இந்த வார கவிதைகள்.


1.மறந்துவிட்ட பொம்மைகள்.

கண்களில் மைதீட்டி
கன்னங்களில் பௌடரிட்டு
உதடுகளில் சாயம்பூசி
கவர்ச்சி உடையணிந்து
வண்ண வண்ண மலர்கள் சூட்டி
அழகாய்த்தான் அனுப்பிவைத்தாய்
ஒரு துரோகத்தை.

சுகித்துப் பழுத்த நான்
ஒப்பனை கலைத்து
ஒவ்வொரு ஆடையும் களைந்து
நிர்வாணப் படுத்தியதில்
குழந்தையாகிவிட்ட உன் துரோகத்துடன்
கொஞ்சி விளையாடுகிறேன்.

மறந்துவிட்ட பொம்மைகளென
மரித்துக் கிடக்கின்றன தரையில்
வெறுப்பும் தண்டனையும்.

2.நான் சூன்யம்


கல்லெறியக் கலங்கி
கலைந்து அலையலையாய்
நெளிந்து பரவியபின்
தெளிந்த ஆழ்மௌன மோனத்தில்
தலைக்குப்பின் வந்த ஒளிவட்டச் சூரியனுடன்
குளக்கரை புத்தனானேன்
அந்தி சாய்ந்து சற்றே இருட்ட
வந்த பிறைநிலவு சூடி
சிவனானேன் குளத்து நீரில்
சுத்தமாய் இருட்டிவிட
நான் சூன்யம்.



Friday, January 28, 2011

பெரியவர்கள் வாழ்வு.

சிறு வயதில்
அழுது அடம்பிடித்து
வாங்கிச் சேர்த்த
பொம்மை, பலூன்,
காத்தாடி,  கண்ணாடிக் கோலி,
தண்ணீர்த்துப்பாக்கி, இன்னபிற...


எல்லாவற்றையும்
வீதிகளில் வைத்து
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்
கூவிக் கூவி   


விற்றுப் பிழைப்பதே
பெரும்பாலுமிங்கு

பெரியவர்களாவதும்
வாழ்வதும்.

-மீள் பதிவு. தவறுதலாக நீக்கப் பட்டுவிட்டது. பின்னூட்டமிட்டிருந்த  நண்பர்களுக்கு நன்றிகள்.

Thursday, January 27, 2011

நான் பாருக்குப் போகிறேன் குடிக்க.

ஆகச்சிறந்த கடவுளை
ஆகச்சிறந்த பிரதியொன்றில் படைத்திருந்தேன்
இறுதிப் பக்கத்தில் அவனை
என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கையில்
பாரசீக நாட்டின் பாலியல் தொழிலுக்கு
அடிமைகளை ஏற்றுமதி செய்யும் வியாபாரியொருவன்
எதேச்சையாய் வழியில் பார்த்துவிட்டுக் கேட்டான் 
எனக்குத் தருவாயா... எவ்வளவு விலையென்றாலும் பரவாயில்லை
பிளாங்க் செக் தருகிறேனென்றான்
ஒரு பாட்டில் ரெமி மர்ட்டினுக்கான விலைமட்டும் போதுமென்றேன்
ஆச்சர்யத்துடன் அவ்வளவுதானா என்றான் நம்பமுடியாமல்
மேலும் ஏதேனும் தர விருப்பமெனில்
நீ அணிந்திருக்கும் லூயிஸ் வூட்டன் (louis vuitton ) உடையும்
உன்கையில் புகைந்துகொண்டிருக்கும் சுருட்டும் போதுமென்றேன்
அதிர்ஷ்டத்தை தந்த கடவுளை மேல் நோக்கி வணங்கிவிட்டு
கடவுளை இழுத்துக் கொண்டு போனான் சங்கிலியால் பிணைத்து
விடைபெறுமுன் கடவுள் கத்தினார்
என்னை கைவிட்டுவிட்டாய்
படைப்பில், படைத்தவனுக்கே துரோகம் செய்துவிட்டாய்
நிச்சயம் நீ நரகத்துக்குத்தான் போவாய்
எல்லா விரல்களையும் எனைப்பார்த்து மடக்கி
நடுவிரலை மட்டும் உயர்த்தி
கடவுளுக்குக் காட்டி விட்டு
நான் பாருக்குப் போகிறேன் குடிக்க.

Tuesday, January 25, 2011

காந்தியின் சிரிப்பும் அதற்கான காரணங்களும்.

காலையில்
வெளியில் செல்கையில்
சாலையில்
வழியில் கிடந்தது
நான்காய் மடிக்கப்பட்ட
ருபாய் நோட்டொன்று

விட்டுச் செல்வதைப் பற்றியோ
எடுத்துக் கொள்வதைப் பற்றியோ
சற்றும் எண்ணவில்லை
சட்டென எடுத்துக் கொண்டேன்
யாரும் கவனிக்கிறார்களா என
கவனித்தபடி

என்னுடைய அதிர்ஷ்டமென
மனது
மார்தட்டிக் கொள்ளும்போதே
இன்னொருவன் அவஸ்தையென
தலையில் குட்டுகிறது
மனசாட்சி

எவருடைய அவசியமோ
எதற்கான சேமிப்போ
என்ன கனவோ
ஏதேனும் இருக்கக் கூடும்
உறுதியாய்

எடுத்த இடத்தில்
எவருடையதென்றால்
எல்லாக் கரங்களும்
எட்டி ஏந்தக் கூடும்
என்னுடையதென
மகாலட்சுமியை
மறுப்பதில்லை எவரும்

விசாரித்துச் சென்று தர
எந்தப் பணத்தின் மீதும்
குறிப்புகள் இருப்பதில்லை
நியாயமாய் அது
யாருக்குச் சொந்தமென

கிடைத்த இடத்திலேயே
கிடக்க விட்டுவிட்டால்
தொலைத்தவர்
தேடி வருவதற்குள்
கிடைத்தவர்
எடுத்துக்கொள்வர்
என்போலவே

எல்லாவற்றுக்கும் மேலாக
கண்டெடுத்த என்
கஷ்டங்களுக்கான
கடவுளின் பரிசாகவோ
தவறவிட்டவன் செய்த
தவறுகளுக்கான
தண்டனையாகவோ
இருக்கவும் கூடும்

தலை நிமிர்ந்து
கடை நுழைகையில்
கண்டெடுத்த பணம் வைத்த
கால்சட்டைப் பையிலிருந்து
ஒலியற்று நிறைந்து வழிகிறது
கரன்சிகளிலிருக்கும்
காந்தியின் சிரிப்பும்
அதற்கான காரணங்களும்.

-நன்றி திண்ணை வார இணைய இதழ்.
  

Sunday, January 23, 2011

ஒரு குழந்தை மழை.


வெளிச்சம் நிரம்பியிருந்தயிரவு 
நிலவு கண்ணில் படவில்லை 
எழுந்து தேடவுமில்லை.

அருகருகே 
அம்மா, குழந்தை.
நீண்ட ஒற்றைக்கொம்புடன்
மூன்று கால் மான்,
தும்பிக்கை உயர்த்தியபடி
வலது காலும் 
வாலுமற்ற யானை,
அங்கங்கே விரிசலுற்ற 
குதிரைகளற்ற தேர்,
களைந்தெறிந்த  
குழந்தை  உடைகளாய்,
உடைத்த பொம்மைகளாய்
இன்னுஞ் சில
உருவமற்ற குவியல்கள்.

"விர்ர்"ரென்று 
விமானமொன்று
அருகில் கடக்க
விருக்கென்று துள்ளிய குழந்தை
தவழ்ந்து செல்கிறது 
தாயிடம்.

குளிர்ந்து கனத்த 
காற்றொன்றில் கலைந்து
பாம்பாய், புலியாய்,
கரடியாய், யானையாய்,
உருவங்களற்றதுமாய்,
உடைந்து 
உருமாறியது அம்மா.

அரவணைத்துக்காக்க    அருகே 
அம்மா இல்லாதலால் 
அனைத்துமே   பயமுறுத்த,
முகங்கருத்துக் குழந்தை
பயந்து அழ, 
ஆரம்பித்திருக்கிறது 
ஒரு குழந்தை மழை.

-நன்றி திண்ணை வார இணைய இதழ்.
-நன்றி பதிவுகள் மாத இணைய இதழ்

Wednesday, January 19, 2011

நந்தலாலா விமர்சனமும், சாருவின் தரங்கெட்ட அரசியலும்- பகுதி - 4ஆ. மப்பு, நட்பு, தப்பு -2

மப்பு, நட்பு, தப்பு -2  


    ஆட்டியர்னு சொன்னா வாயால, மிஸ்கின இப்படி கடுப்பாகி திட்ட என்ன காரணம் சாருவுக்கு?
     மிஸ்கின் மேடையில நந்தலாலா பத்தி இருபது நிமிஷம் பேசினதோ, சாரு புத்தகங்கள சரோஜா தேவி புத்தகம்னு சொன்னதோ, நியூஸிலாந்துல மேட்டர் பண்ணினியான்னு தன்ன சாரு கேட்டதா சொன்னதோ, ரெமி மார்ட்டின் இருக்கான்னு கேட்பாருன்னு சொன்னதோ கிடையாது.
   மிஸ்கின் தன் "நண்பேண்டா" என்பதற்காக ஒரு சுமாரான, வித்யாசமான, காப்பி படத்த உலகப் படங்கள தமிழனுக்கு அடையாளம் காண்பிக்கற, வெளக்குற, உள்ளூர் படங்கள தொவச்சு தோரணங் கட்டித் தொங்கவிடுற அதிமேதாவி சாரு, கிளாசிக்கு, உலகப் படங்கள்ல இருபதுல ஒண்ணுன்னு அள்ளி விட்டும், தன்னப்போல நண்பன்னு பாக்காம தன் புத்தகங்கள பத்தி தனக்கு தோணுன உண்மைய {சரோஜாதேவி புக்குன்னு} மிஸ்கின் சொல்லிட்டாருங்குற கோபம் தான் சாருவுக்கு.
     இந்தமாதிரி விழாவுல மிஸ்கின் பேசிட்டு இருந்தப்ப அத கத்தி கூச்சல் போட்டு தடுக்காத தன் நண்பர்கள், ரசிகர்கள் மேல் வருத்தமாம் சாருவுக்கு, அவங்கல்லாம் அப்டி பேச அவர விட்டிருக்கக் கூடாதாம், அய்யா சாரு நீங்க அப்ப மேடைல தானே இருந்தீங்க உண்மையான கலகக்கார எழுத்தாளனான நீங்க ஏன் எழுந்து போய் உங்க நண்பன் மிஸ்கின்கிட்ட டைரெக்டா அப்பவே பேசறத நிறுத்தச் சொல்லியிருக்கக் கூடாது? நீங்க சபை நாகரிகத்த காப்பாத்திக்குவீங்க உங்க ரசிகர்களும், நண்பர்களும் அத விட்டுகொடுத்து தடுத்திருக்கனுமா?
      இளையராஜா இசை நல்லாயில்லேன்னு முதல்ல எழுதியிருந்தாராம், மிஸ்கின் அது படத்தோட வியாபாரத்த பாதிக்கும்னு சொன்னதுனால காலைல நாலு மணிக்கு எழுந்து அத நீக்கினாராம், அப்படீன்னா உங்க மத்த படங்களோட விமர்சனமும் அதுக வியாபாரத்த இதே மாதிரிதானே பாதிக்கும், உங்க நண்பன்னா  நீக்கிடுவீங்க மத்தவங்கன்னா கொதறிப்போட்டு மோந்துபாத்து மூத்திரம் பெஞ்சு வைப்பீங்களா?
      இவரு போடற கண்ணாடி வெல 40௦,௦௦௦000 ரூபாயாம், புத்தக வெளியீடு விழாவுக்கு 2,௦௦௦௦00 000 ரூபாய் செலவாம், இவரு போடற டிரெஸ் உலக அளவுல டாப்புல இருக்கிற பிரேண்டுகளாம், அதுலயும் முத இடத்துல இருக்கிற பிரேண்டுதான் இவருக்கு ரொம்ப புடிக்குமாம், அது இன்னும் இந்தியா மாதிரி ஏழைக நாடுக பக்கம் வரலியாம், இவரு அடிக்கிற சரக்குக, ரெமி மார்ட்டின், அப்ஸல்யூட் வோட்கா, அனீஸ்... இந்த மாதிரி தானாம்
     இது வரைக்குமான உலக வரலாறுல எந்த கலகக் காரனும், புரட்சியாளனும், இந்த மாதிரி enjoy.பண்ணுனதா சரித்திரமே இல்லை. காந்தி கூட தன்னோட பணக்கார கோட்டு, சூட்ட தூக்கி போட்டுட்டுதான் பொது வாழ்வுல இறங்கினாராம்.  இலக்கியத்துல நம்ம பாரதியார், புதுமைப்பித்தன் மொதற்கொண்டு எல்லா புரட்சி, கலகக்கார படைப்பாளிகளும் வறுமையில்தான் இருந்தாங்க. இதுக்கு காரணம் அந்த சூழ்நிலையோட வெகுஜன மக்களால அவங்களோட கருத்துக்கள ஏத்துக்கவோ, புரிஞ்சுக்கவோ முடியாம போனதும், அதுக்காக அவங்க வெகுஜன ரசனையோட தன் படைப்புகள சமரசம் செஞ்சுக்காம கடைசிவரைக்கும் போராடுனதும் ஆகும்.
     சாரு இருபது வருசத்துக்கு முன்னாடி மாடா கஷ்ட்டப்பட்டுட்டு இருந்த நீங்க எப்படிங்கையா இப்போ இந்த மாதிரி ஆப்கானிஸ்தான் சுல்தான் மாதிரி என்ஜாய் பண்றீங்க?
      வெகுஜன ஊடகங்களோட நீங்க செஞ்சுட்ட சமரசமும், நவீன இலக்கியத்த அவங்ககிட்ட உங்க குடிக்கும், டவுசருக்கும் நீங்க வித்துட்டதும்தானே சாரு.
       வலைல அவரோட ஒரு வாசகரோட மின்னஞ்சல போட்டிருக்காரு, அதுலயே தெரியும் தன்னோட வாசகர்கள எவ்வளவு கேனையங்கன்னு சாரு நெனைக்கிறார்னு, சொல்ல வருத்தமாத்தான் இருக்கு அப்டித்தான் அவங்களும் இருக்காங்க. 
     அந்த மின்னஞ்சலோட சாராம்சம் என்னன்னா, நவீன எலக்கியத்த காப்பாத்தற யுக புருசர்களா இந்த நூற்றாண்டோட மத்தியில ஜெயமோகன், கோணங்கி, எஸ்.ராமகிருஸ்ணன், மனுஷ்யபுத்திரன், சாருன்னு பஞ்ச பண்டிதர்கள் அவதரிச்சு வந்தாங்க, கலியுகத்துல இருந்த மோசமான எலக்கியச் சூழலினால, மனம் மயங்கி ஜெயமோகன், எஸ்.ரா, மனுஷ்யபுத்திரன் மூணு பேரும் அவதார நோக்கத்த மறந்து பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டங்க, ஆனா கோணங்கி , சாரு ரெண்டு பேர் மட்டும் கொண்ட கொள்கைல உறுதியா இருந்து பணம் சம்பாதிக்காம, அடுத்த வேளை சாப்பட்டுக்கே கஷ்டப் படறாங்காமா... கோணங்கி பத்தி சொன்னது சரிதான். ஆனா சாருவையும் சேர்த்துச் சொல்றாரு பாருங்க, என்ன கொடும சாரு இது. இத கூச்சபடாம publishவேற பண்ணியிருக்காரு நம்ம சாரு.
    புத்தக வெளியீட்டு விழாவப்ப சாரு படத்துக்கு பீரால அபிசேகம் பண்றாங்க அவரோட வாசக ரசிக சிகாமணிகள். இதுக்கு சினிமா ஸ்டார்களோட ரசிகர்கள் எவ்வளவோ பரவாயில்லையே... அவங்க பால்லதானே அபிசேகம் பண்ணுவாங்க. இப்படிப் பண்ற உங்க ரசிகர்களையும், இதெல்லாம் அனுமதிக்கிற உங்களையும் நெனச்சா எனக்கு கொடங்டங் கொடமா வாயில எச்சியும், bladderla மூத்திரமும் ஊருது, அதெல்லாம் எங்க துப்பறது, எங்க பெய்யறது சாரு? எனக்கும்  உங்க போட்டோ ஒன்னு குடுப்பீங்களா?
      எல்லாப் பெற்றோரும் தன் கொழந்த ரொம்ப அறிவாளின்னுதான் நம்பறாங்க, நான் சொல்லறது கொழந்தைய இருக்கிற வரைக்கும், அந்த மாதிரி சாருவும் நம்பறது தப்பில்ல, 
     ஆனா கூட என்ன சொல்றாருன்னா, அவரு பொண்ணு வைஷ்ணவ குலமாம், அதனால பயங்கர சார்ப்பாம்,  அறிவாளியாம், இவ்வளவு முற்போக்கா, கலகக்காரனா ஊருக்கு எழுதுனாலும், சாரு மனசுக்குள்ள எவ்வளவு பிற்போக்குவாதின்னு, இத வச்சே தெரிஞ்சுக்கலாம், குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்னு எங்க நவீன பாட்டன் சொன்னது நீங்க படிக்கலியா சாரு? 
      அப்ப, எல்லாக் கொழந்தைகளையும், உங்க சக எழுத்தாளர்களையும் கூட இப்படித்தான் பாக்கறீங்களா? வைஷ்ணவ கொலத்துக்கும் அறிவாளித்தனத்துக்கும் ஏதாவது அறிவியல் ரீதியா சம்பந்தம் இருக்குங்கிறதுக்கு எதாச்சும் ஆதாரம் வச்சுருக்கிங்களா? அந்த கொலத்துல  முட்டாளே யாருமில்லையா? ஏன், அதான் கண்ணு முன்னாலேயே கல்லு மாதிரி நீங்க இருக்கிங்களே சாரு, உங்கள விட நல்ல உதாரணம் வேற வேணுமா?
     கால்ல விழுவேன் இல்ல கால வாரிவிடுவேன், இதுதான் ஒட்டுமொத்த தமிழனோட குணம், கலாச்சாரம்னு கூசாம சொல்றீங்களே சாரு தமிழனோட கலச்சாரத்த, இந்தமாதிரி இழிவா வரையறுத்துச் சொல்றதுக்கும், எழுதறதுக்கும் உங்களுக்கு யாரு அதிகாரங் கொடுத்தது ?
     இதுவே வேற இனமா இருந்த இப்படி சொன்னவன சும்மா விடுவாங்களா? தமிழனுக்கு இருக்கிற இந்த சகிப்புத் தன்மையும், நமெக்கெதுக்கு  வம்புன்னு ஒதுங்கிப் போறதும்தான், சாரு மாதிரி இங்கிருந்தே எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு, இந்த கலாச்சாரத்தையே திட்றவங்களுக்கு ரொம்ப எளக்காரம போச்சு.
     அய்யா சாரு நீங்க தமிழ்லதான் எழுதனும்னு தமிழ் தாய் ஒன்னும் ஒத்தக் கால்ல நிக்கலியே? ஏன் நீங்க எழுத்தளர்கள கொண்டாடுற இங்லிஸ், எதியோப்பிய, காங்கோ மொழிகள்ல எழுதக் கூடாது?
     அந்த சாமியாரப் பத்தி, ஆகா, ஓகோன்னு ரசிகர்கள் கிட்ட சொல்லிட்டு,  cd ரிலீஸ் ஆனதும் நா ஒரு பச்சக் கொழந்த வாயில வச்சாக் கூட சப்பத் தெரியாது வெரலன்னு ஒரு அந்தர் பல்ட்டி அடிச்சு, வாசகர்கள்கிட்ட இருந்து தப்பிச்சுட்டதுமில்லாம, யாராச்சும் கேள்வி கேட்டுருவாங்கன்னு, சூட்டோட சூடா பிரபல வார இதழ்ல சரசம், சல்லாபம், சாமியாருன்னு எழுதி, உங்க வாசகர்களோட அரிப்ப சொரிஞ்சு விட்டதுமில்லாம, உங்க தார்மீகப் பொறுப்புக்கு கல்தா குடுத்துட்டு, நல்லா கல்லாவும் கட்டிட்டீங்க, ஐயோ சாரு,  நீங்க எவ்வளவு பெரிய அப்பாவி, கொழந்த.
   ஒலகக் காமெடியே இதுதான், அதாகப் பட்டது, இப்ப இருக்கிற எலக்கிய சூழ்நிலைய, வளர்ச்சிய சாரு, எஸ்ரா, மனுஷ்யப் புத்திரன் மூணு பேருந்தான், அவங்களோட ரத்தம், வேர்வை, விந்து, எல்லாஞ் சிந்தி , வாழ்க்கையே தியாகம் செஞ்சு உண்டாக்குனாங்கலாம்.
    என்ன சாரு மப்புல ஒளர்றது தப்பில்லைதான், அதுக்காக, நாங்க மூணு பேருந்தான் சரக்கடிச்சுட்டு சங்க இலக்கியமெல்லாம் எழுதுனோம், கம்யூட்டர கண்டுபுடிச்சோம், நெலாவுக்கு ராக்கெட் விட்டோம், வெங்காயத்துக்கு வெலய ஏத்துனோம், எலக்கியத்த வளத்தோம்ன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவரு. கேக்கறவன் கேனையனா இருந்தா, ரஞ்சிதாவோட நித்தி, கட்டில்ல ஹடயோகதான் பன்னுனார்னு சொல்வீங்களே.
     20 வருசத்துக்கு முன்னாடி மாடா ஓலைச்சு ஓடா தேஞ்ச நீங்க இப்ப குடிக்கற சரக்கு, போடற டிரஸ்சு போடற கண்ணாடி, இன்னும் போடற பொ... இதெல்லாம் பார்த்தா நீங்க தியாகம் பண்ணுன மாதிரி தெரில சாரு,  இலக்கியந்தான் ரத்தம் சிந்தி, தியாகம் பண்ணி ஊத்தி, ஊத்தி, உங்கள வளத்துட்ட மாதிரி தெரியுது. 
     பாரதி, புதுமைப் பித்தன்....இன்னும் பல நவீன இலக்கிய வாதிங்க எல்லாரும் சேர்ந்து சமரசமில்லாம வருமையில கஷ்ட்டப்பட்டு வளத்துட்ட சூழ்நிலை இது. 
     முக்கியமா இந்த நூற்றாண்டோட IT , பொருளாதார வளர்ச்சியால, 25 வயசுக்குள்ளயே எல்லா சந்தோசத்தையும் அனுபவிச்சுட்டு விரக்தியா வாழ்க்கைய இலக்கியத்துல தேடுற இளைஞர் கூட்டம்தான் இப்போதைய இலக்கியச் சூழ்நிலைக்கு முக்கிய காரணம்.
    உங்க எழுத்து வக்கிரக்காரன்களோட உறுத்தர மனசாட்சிய மரத்துப்போகச் செய்யிற சரக்கு, அபின், கஞ்சா, போல இன்னொரு போதைதான் சாரு.  அபின், கஞ்சா, சரக்கு கூட அந்த குற்ற உணர்ச்சிய மறக்கடிக்குமே ஒழிய அழிக்காது,  ஆனா உங்க எழுத்து எல்லா வக்கிரங்களுக்கும் வக்காலத்து வாங்கறதுமில்லாம, அதையெல்லாம் ஏதோ இயல்பானது, ஆரோக்கியமானதுதான்னுங்கற மாதிரி காட்டுது.
     நீங்க பயங்கர புத்திசாலி, உங்க எழுத்த நீங்க நம்பமாட்டிங்க, அதனால அது உங்கள ஒன்னும் செய்யாது, {தன்னோட விஷத்தால பாதிக்கப் படாத ஒரு பாம்பைப் போல} ஆனா உங்க எழுத்த நம்பற, அதனால தூண்டப் படற, உங்களோட முட்டாள் ரசிகர்கள நெனச்சாத்தான் பாவமா இருக்கு. 
     உங்கள மாதிரி ஒரு ஆளுமையுள்ள ஆள் நவீன இலக்கியத்தோட ickonல ஒருத்தரா இருக்கிறத நெனைக்கும் போது, எலக்கியமும், அத எழுதற உங்கள மாதிரி ஆள்களும், அத வாசிக்கிற எங்களமாதிரி வாசகர்களும், இந்த நாடும்  நாசமாய் போகட்டும்னுதான் சொல்லத்தோணுது சாரு.                   
  
          

ஒரு ஏரி, நிறைய நீர், நிறைய பறவைகள்...

எங்கள் ஊரில்
ஒரு ஏரி இருந்தது
நிறைய நீரும்,
பறவைகளும் கூட.

நீரை பாட்டில்களிலும்
ஏரியை பிளாட்களிலும்
அடைத்து வித்துவிட்டார்கள்.

இப்போது
எங்கள் ஊரில்
நிறைய வீடுகளும்
வீடுகளுக்குள்  சொந்தமாக
ஆளுக்குக் கொஞ்சம்
பாட்டில் நீரும், ஏரியும்...

பறவைகள்தான்
எவ்வளவு சொல்லியும் கேட்காமல்
எங்கோ பறந்து போய்விட்டன
எங்களை நிராகரித்துவிட்டு. 

Friday, January 14, 2011

வீடெனப்படுவது...

இந்த வார ஆனந்த விகடனில் வெளியான எனது கவிதை

அதிகாலை ஊரிலிருந்து
தவிர்க்க முடியாத தகவலொன்று
கைப்பேசி சொல்லப்பட
ஆற அமர யோசித்து
பொருத்தமான பொய்யொன்றை
ஆபீசில் சொல்லிவிட்டு
அவசியம் வருமாறு
அவசரமாய் கிளம்பிவிட்டனர்
அப்பா, அம்மா, தங்கை.

எனக்கும் சேர்த்து எடுத்துச் சென்ற
ஆறேழு நாட்களுக்குமான
ஆடைகள், இதர பொருட்களுடன்
ஒட்டிக்கொண்டு
வீடும் சென்றுவிட
என்னுடன் மிச்சமிருப்பவை
சில சுவர்கள், பொருட்கள்,
சில ஜன்னல்கள், கதவுகள்,
ப்ரிஜ்ஜில் மிஞ்சிய  நேற்றைய மாவு,
இவற்றுடன்
ஹாலில்  அமர்ந்து
தம் அடிக்க கொஞ்சம் சுதந்திரமும்,
நிறைய தனிமையும்.

-நன்றி 19-01-11 ஆனந்த விகடன் வார இதழ். 

-நன்றி பதிவுகள் இணைய இதழ் 

Thursday, January 13, 2011

நீங்கள் ஒரு கொலைகாரன்...

நீண்ட நாட்களுக்குப்   பிறகு 
நெருங்கிய நண்பரொருவரின்
நெருங்கிய நண்பரைப் பார்த்தேன்
எனக்கு தூரத்து நண்பர் முறை 
முகத்தில் நீண்ட தாடியும் 
முறுக்கிய மீசையும்
விழிகளில் ஒளியுமாய்  இருந்தவரிடம் 
நீங்கள் ஒரு கொலைகாரன்...
உங்களையே கொன்று விட்டீர்கள்  என்றேன்
சிரித்துக்கொண்டே மௌனமாயிருந்தார்
கண்டுபிடித்துவிட்டேனென்ற
கர்வம் தாங்கவில்லை எனக்கு.  

Wednesday, January 12, 2011

லட்சத்தியெழுபத்தியாராயிரங்கோடி

ஒன்று,
பத்து,
நூறு,
ஆயிரம்,
பத்தாயிரம்,
லட்சம்,
பத்துலட்சம்,
கோடி,
பத்துகோடி,
நூறுகோடி,
ஆயிரங்கோடி,
பத்தாயிரங்கோடி,
லட்சங்கோடி,
நிற்க.
தண்ணி குடித்தோ\ அடித்தோ
ஆசுவாசப்படுத்திக் கொள்க,
இப்போது க்ளைமாக்ஸ்...

லட்சத்தியெழுபத்தியாராயிரங்கோடி

பெருமாள் கோயில்ல
நாமத்தப் போட்டு
உண்டகட்டி தர்றாங்களாம்
வாங்கித் தின்னுடேபோய்
இலவச டிவில
புதுப் படம் பாருங்க.
    

Tuesday, January 11, 2011

இருத்தலின் கேள்வி

ஒளிமின்னும் கண்களுடன்
உள்ளொடுங்கிய தவத்தில்
ஒற்றைப் பல்லி

வண்ணங்கள் மின்ன
பறந்தலைகிறது
ஒரு பட்டாம்பூச்சி

இருத்தலின் பூரண கணமொன்றில்
ஈரத்துடன் எறிந்த நாக்கில்
ஒட்டிக்கொண்டு படபடக்கிறது சிறகுகள்
கடைசி நுனி விழுங்கப்படும்போதும்

திடும்மென
கால் மடிப்பில் சிறகுகள் முளைத்து 
உடலெங்கும் வண்ணப் புள்ளிகள் தோன்றி
பல்லி பறந்தது
பட்டாம்பூச்சியின் சிறகுகளுடன்

இனி
உங்களுக்கான பள்ளிக் கேள்விகள்
  (அ) பல்லிக்கு ______ கால்கள் இருந்தன
         பட்டாம்பூச்சிக்கு உள்ள சிறகுகளின் எண்ணிக்கை_______
  (ஆ) பொருத்துக
                                        பல்லி - வண்ணத்துப்பூச்சி
                           பட்டாம்பூச்சி - மனிதன்
                                                    - ஓணான்
  (இ) பல்லியின் உணவுமண்டலத்தைப் படம் வரைந்து பாகங்களைக் குறி
                                                     (அல்லது)
         பட்டாம்பூச்சியின் இனப்பெருக்க மண்டலத்தைப் படம் வரைந்து பாகங்களைக் குறி

கல்லூரிப் பட்டங்களுக்கான கேள்விகள்
       பல்லியின் உயிரியல் பெயர், குடும்பத்தைப் பற்றி இருபது பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுது
                                                        (அல்லது)
      பட்டாம்பூச்சியின் உயிரியல் பெயர், குடும்பத்தைப்பற்றி இருபது பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுது (தேவையான விளக்கப் படங்களுடன்)

ஆராய்ச்சிக்கான கேள்வி
                  பல்லியின் ஜீன்களை, பட்டாம்பூச்சியின் ஜீன்களாக மாற்றுவதில் தற்போதுள்ள  முக்கிய பிரச்சனைகளையும், அவற்றுக்கான உனது தீர்வுகளையும் செய்முறையுடன் விளக்குக

ஜீனியஸ்... எக்ஸ்சலென்ட்
முதல் மதிப்பெண்
கோல்டு மெடல்
வெளிநாட்டு வேலை

இப்போது
உங்கள் இருத்தலுக்கான கேள்வி
   உங்கள் பல்லி பட்டம்பூச்சியாகி
   பறந்ததைப் பார்த்தீர்களா

இருத்தலின் முன்
உங்கள் மதிப்பெண்
பூஜ்ஜியமல்ல
வெறும் புள்ளிமட்டுமே.

உச்சத்தின் உச்சிக்குச் செல்லும் பாதை

எப்பொழுதும்
துவங்குங்கள்
சமநிலையிலிருந்தே...

இரு கரங்களையும்
இறுக்காமல்
பற்றிப் பரவுங்கள்
மெதுவாய்...

இடுப்போடு இடுப்பும்
பாதங்களோடு  பாதங்களும்
இருக்குமாறு
பொறுத்திக் கொள்ளுங்கள்
உறுத்தாமல்...

திருகியோ,
அமுக்கியோ
உங்களுக்கெப்படி வாய்த்திருக்கிறதோ
அப்படியே ஆரம்பியுங்கள்...

சூடேறும்வரை
மிதமாய் உருட்டுங்கள்
இதமாய் முறுக்கி
சப்தமொழி அறிந்து
சீராய் கூட்டுங்கள்
வேகத்தை.

கவனித்துக் கடப்பதற்கு 
காத்துக் கொண்டிருக்கும் 
மேடுகள் பள்ளங்களை
ஊன்றிக்  கவனியுங்கள்.

வளைவுகளில், நெளிவுகளில்
வளையுங்கள், நெளியுங்கள்
வேகத்தை குறைத்தபடி,
நிலையை மாற்றியபடி
கவனத்தில் வையுங்கள்
காயங்கள் அத்யாவசியமில்லை...

நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்
நீங்கள் நிரம்பித் ததும்புவது
உச்சத்தின் உச்சியை
அடையும்வரை மட்டுமே...

அடைதலின் இறுதியில்
ஆசைகளின் முடிதலில்
ஆழத்தில் தோன்றுமொரு
கண்ணுக்குத் தெரியா
கருந்துளை வழியே
கசிந்து கசிந்து
வெறுமையாகி விடுவீர்களென்பதால்
இலக்கு பற்றிய எண்ணங்களை
தூக்கிச் சுமந்து செல்லாமல்
எடுத்து எறியுங்கள்
இலேசானதும்
வழியெல்லாம் கொண்டாட்டம்
வலிகூட கொண்டாட்டம்...

இறுதியாய் ஒன்று
ஆசைகள் வடிந்து
அடங்கிய பின்னும்
உங்கள் நேசமிருக்கட்டும் அப்படியே...

உச்சத்தின் உச்சிக்குச்
செல்லும் பாதை
உங்களை
அன்புடன் வரவேற்கிறது
வருக வருக,
உங்கள் பயணம் இனிதாக
நல்வாழ்த்துக்கள்.

      
   

Sunday, January 9, 2011

குழந்தைக் கனவினுள்...

இரண்டிரண்டு படிக்கட்டுகளாய் 
தாவித்தாவி வந்ததில் 
தவறி விழுந்து
தலையில் பெரிய காயம்.

ஊசி வேணா.. வேணா...

அழுதவளை 
அதட்டி இழுத்து வந்த அப்பாவுடனும்
அறியாமல் இடித்துவிட்ட படிக்கட்டுடனும்
அழுத்திப் பிடித்துக் கொண்ட சிஸ்டருடனும் 
ஆறு தையல்கள் போட்ட என்னுடனும்
 கா  விட்டுவிட்டு 
கண்ணீர் கோடுகளாய் காய 
அழுதபடியே 
தூங்கிப்போகிறாள் ஓவியா.

அனால்ஜெசிக்குகளின் மந்திரத்தில்
வலி மறந்த கணமொன்றில் 
பழம் விட்டுவிடுவாளென 
குழந்தைக் கனவொன்றினுள்
நுழைந்து காத்திருக்கிறோம் 
எல்லோரும் நம்பிக்கையுடன்.

-நன்றி திண்ணை இணைய இதழ்  
    

மழை நிலை

மழை நிறைத்த
குண்டு குழிகளில்
துண்டு வானங்கள்
பகலெல்லாம் சூரியனிலும்
இரவெல்லாம் நிலவினிலும்
குதித்துக் குதித்து
குளித்துக் களித்ததை
கத்திக் கதைத்தபடி
கரைகளில்
சில
குட்டித் தவளைகள்.

-நன்றி திண்ணை வார இணைய இதழ். 

Saturday, January 8, 2011

வன்முறை

நரம்புகள் புடைக்க விரல்களை இருக்கமாய் குவித்து
மேஜையில் குத்துகிறீர்கள்
சத்தம் வரும்படி பற்களை கடித்துக் கொள்கிறீர்கள்
புன்னகை மாறாமல் மனதுக்குள்
கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறீர்கள்
காறி உமிழ்கிறீர்கள்
உடைந்து கண்ணீர் விடுகிறீர்கள்
விருக்கென்று வெளியே சென்றுவிடுகிறீர்கள்
அவசரமாய் உதடுகள் நடுங்க சிகரெட் பிடிக்கிறீர்கள்
கோவிலுக்கு போகலாமாவென யோசித்துவிட்டு
பாருக்குச் சென்று குடிக்கிறீர்கள்
சாதத் தட்டை தூக்கி எறிகிறீர்கள்
இரண்டு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடிக்கிறீர்கள்
ஆழமாய் மூச்சை இழுத்துவிட்டு
அதை கவனிக்க முயல்கிறீர்கள்
யாரையோ நினைத்துக்கொண்டு
சுயமைதுனம் செய்துவிட்டு
சோர்ந்து தூங்குகிறீர்கள்
பழைய ரகசியங்களை உரக்கக் கத்துகிறீர்கள்
..................................................................................
..................................................................................
..................................................................................
ஆனால்
ஓவியாவை மட்டும்
தோல்சிவக்க
ஓங்கி அடித்துவிடுகிறீர்கள்.

காமக் கடுங் கானல்.

இந்தவார ஆனந்தவிகடனில் வெளியான எனது கவிதை 

மெல்லிய குறுந்தகடிலிருந்து
வெளிவந்து புரிந்த 
தூரதேசத்து
ஆண்கள், பெண்களின்
நீண்ட கலவிகளில்
கலந்திருந்தேன்
கவுரவ விருந்தினராக.
இரு வெள்ளைப் பெண்களும்
ஒரு கருப்பு இளைஞனும்     
உச்சத்தை நெருங்கிய கணத்தில்
சட்டென மறைந்தனர் 
மின்சாரவேகத்தில்.

காற்றில் கரைந்திருந்த 
கலவிகளின் ஒலிகளுடனும்
கனவுகளில்  மிதந்த 
கலவிகளின் நினைவுகளுடனும்
நிகழ்ந்து முடிகிறது 
தவறவிட்டுவிட்ட ஒரு
தனிமையின் உச்சம்.

-நன்றி 12 -01 -11ஆனந்த விகடன் வார இதழ்

-நன்றி பதிவுகள் மாத இணைய இதழ் 
.

Tuesday, January 4, 2011

நந்தலாலா விமர்சனமும் சாருவின் தரங்கெட்ட அரசியலும்-பகுதி 4- மப்பு, நட்பு, தப்பு

மப்பு, நட்பு, தப்பு 

ஒரு ஆகச் சிறந்த படைப்பாச்சும் படைக்காத ஒருத்தரோட விமர்சனத்த நிராகரிச்சுடலாம்னு தெரிதாவோ, தெரிலியாவோ {யாருன்னு கண்பார்மா தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படறவங்க சாருவுக்கோ, எஸ்ராவுக்கோ, ஜெமோவுக்கோ, அவங்க வலைத்தளத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி கேட்டிங்கன்னா கரெக்டா சொல்லி வெளக்குவாங்க}சொல்லியிருக்காங்களாம். அதனால நீங்க யாருவேணா என் விமர்சனத்த நிராகரிச்சுட்டு எஸ்ராவோட பேசத்தெரிந்த நிழல்களோ, மனுஷ்யப்புத்திரனோட என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோமோ, சாருவோட சரசம்,சல்லாபம், சாமியாரோ விட்ட இடத்திலிருந்து படிக்கப் போலாம், இல்லேன்னா ஆதித்யா சேனல்ல வடிவேலோட கைப்புள்ள காமெடி பாக்கப் போலாம். இது எல்லாமே சலிச்சு போயி கொஞ்சம் ஒடம்புல சொரண மிச்சமிருந்தா மேற்கொண்டு
இந்த கட்டுரைய படிக்கலாம்.
       இப்பதான் எலக்கியம் எழுத, படிக்க ஆரம்பிச்சுருக்கிற ஜீரோ டிகிரி படிச்ச முனியாண்டி பூனையான நான் எதுக்கு புத்தக வெளியீட்டு விழாவுக்கே ரெண்டு லட்சம் செலவு பண்ணி, அதுக்கு 1000௦௦௦ பேர் வந்த, பன்னிக்குட்டி மாதிரி 7 புத்தகங்கள ஒரே நேரத்துல ரிலீஸ் பண்ற, போஸ்டருக்கு பீர்ல அபிசேகம் பண்ற புத்திசாலி ரசிகர்கள்(?) இருக்கிற சாரு என்கிற,தமிழ்நாட்டுல தவறிப் பொறந்திட்ட ஒரு ஜீனியஸ் நவீனத்துவ, பின்நவீனத்துவ, ஊசி நவீனத்துவ, ஊக்கு நவீனத்துவ, ஜாக்கெட் நவீனத்துவ... வேண்டாம் இது இப்படியே நீண்டுட்டே போய் எங்க முடியும்னு சாரு புத்தகங்கள ரெகுலரா படிக்கற உங்களுக்கே நல்லாத் தெரியும் மேலும் அவர் மாதிரி பச்சையா எழுதற அளவுக்கு நான் இன்னும் பின் நவீனத்துவ எலக்கிய எழுத்தாளன் ஆகலேங்கறதால இதோட நிறுத்திக்குவோம். ...ஊக்கு...ஜாக்கெட் நவீனத்துவ எழுத்தாளர விமர்சனம் பண்ணி, "யாருமே இல்லாத டீக்கடையில யாருக்கடா டீ  ஆத்தறே, உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடான்னு" அடிவாங்கிட்டு விவேக் பார்த்து புலம்பற அந்த டீக்கடை சிங்கு மாதிரி யாருமே பாக்காத என் ப்ளாக்குல எதுக்கு எழுதணும்?
         காரணம் இருக்கு பாஸ்... கடமை & நிலைமை.
       சாருங்கற எலக்கிய   யானை பண்ற அநியாயத்த மத்த எலக்கிய யானைங்களோ, சிங்கம், புலி, கரடி, முயல், காட்டெருமை, ஏன் நம்ம பெரிய காடோ கூட கண்டுக்காம, கம்முனு அவங்கவங்க வலைத்தளத்துல ஆண்டிபட்டி, ஆட்டையாம்பட்டி வாசகனோட
எலக்கியச் சந்தேக மின்னஞ்சல்களுக்கு பொறுப்பா பதில் அனுப்பிச்சுட்டு பிசியா இருக்கிறதனால இந்த முனியாண்டியோட பூனை ம்மியாவ்  , ம்மியாவ்வுனு கத்திச் சொல்ல வேண்டியதாகிடுச்சு.
       கலைஞர குடும்பத்தோட போட்டுத் தாக்கறது, கமல குனியவச்சு கும்மாங்குத்து குத்துறது, அப்பப்ப உத்தமத் தமிழ் எழுத்தாளன ஊசியால குத்தறது, பழைய ஆன்மீக குரு நித்தியோட ஆசிரம இரகசியங்கள கிரைம், குஜால் கலந்து காரம் மணமோட தர்றது, இப்ப லேட்ட்ஸ்டா மிஸ்கினோட ஆப்டர் மப்பு ஒளறல் இரகசியங்கள வெளியிடறதுன்னு பயங்கர பிசியா இருக்கிற ஒலகப்பட விமர்சகர், பின்நவீனத்துவ எலக்கிய ,கலகக்கார எழுத்தாளர், சாருகிட்ட சில விசயங்கள் நான் கேட்கணும். அந்த விசயங்கள எதாவது ஒரு எலக்கிய யானையோ, சிங்கமோ, நரியோ, காடோ நியாயத்த உணர்ந்து சாருவப் பார்த்து கேட்டா எனக்கு கொஞ்சம் நிம்மதியும், சந்தோசமும் கிடைக்கும். நாம் பாட்டுக்கு நாராயணா, நாராயணான்னு சொல்லிட்டு எம் பிளாக்குல எலந்தப் பழம் கொழந்த முகம்னு கவிதை எழுத ஆரம்பிச்சுடுவேன்.
       அய்யா உங்கள மாதிரியே நானும் சாருவோட ஜீரோ டிகிரி, ராசலீலா, மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்னு படிச்சுருக்கேன், வியந்திருக்கேன், வேர்த்திருக்கேன், ரசிச்சுருக்கேன், அப்புறம் கையடிச்சு இத சத்தியமும் பண்றேன். வேற என்ன பிரச்சனை?
      நந்தலாலான்னு வந்த படத்தப் பத்தி மிஸ்கினோட நண்பனா, இந்தியாவிலேயே நடுநிலையோட செய்திகள தர்ற பத்திரிகை நாங்கன்னு தலயங்கத்துலேயே பெருமை பீத்திக்கிட்ட ஒரு மாத பத்திரிக்கையில சாரு எழுதுன ஒலக விமர்சனம்தான் பிரச்சனை.
அதோட சாராம்சம் இதான், நந்தலாலா
    1.வெறுப்பைக் கடக்கும் அன்பின் வெளிச்சம்.
    2. இந்தியாவுல இதுவரைக்கும் இந்தளவுக்கு ஒரு சிறந்த படம் கூட வந்தது கிடையாது.
    3. சேக்ஸ்பியரோட காவியங்களுக்கு இணையானது.
    4.கிக்குஜீரோவோட காப்பிகிடையாது, அதவிட பலமடங்கு உயர்வானது.
    5. மிஸ்கின் ஒரு ஆட்டியர்.{பிரெஞ்சு வார்த்தை}        
    6.ஒலக க்ளாசிக்குகள்ள 20 ல ஒண்ணா இத தாராளமா சொல்லலாம்.
    7. தமிழ் வாழ்க்கைய, தமிழன பத்திப் பேசற மொதல் தமிழ் படம்.
    
     நீங்க எல்லாரும் நந்தலாலா படம் பார்த்துருப்பீங்க, நெறைய விமர்சனமும் படிச்சுருப்பீங்க, நெறைய ஒலகப் படங்களையும், எதார்த்த படங்களையும் பார்த்துருப்பீங்க உங்க மனசாட்சிய தொட்டுச் சொல்லுங்க உங்களுக்கு நந்தலாலா பார்த்தப்ப என்ன தோணுச்சு?
     காப்பி\ தழுவல்னாலும் பரவால்ல,  நெறைய கொறைகள் இருந்தாலும் பரவால்ல, தமிழ்ல வர்ற பெரும்பாலான மொக்கைப் படங்களுக்கு இது எவ்வளவோ மேல், மிஸ்கின் முயற்சிய வரவேற்கலாம், பாராட்டலாம்னு எனக்குத் தோணுன மாதிரி உங்கள்ள யார் யாருக்கெல்லாம் தோணுச்சோ அவங்க சட்டைய புடிச்சுக் கேட்கிறேன்
   இவ்ளோ ஒலகத் திரைப் படங்களா பார்த்த, விமர்சனம் பண்ணுன அனுபவமும், இருக்கிற சாரு, நந்தலாலாவ மினிமம் மூணு முறை பாத்துட்டு அது,
   -கிக்குஜீரோ காப்பியில்லேன்னு சொல்லலாமா?
   -உலகத் தரமான, எதார்த்தமான படம்னு சொல்லலாமா? 
   -சேக்ஸ்பியரோட காவியங்களுக்கு இணையானதுன்னு சொல்லலாமா?
   -இந்தியாவுல இதுவரைக்கும் இந்த அளவுக்கு சிறந்த படம் வரலேன்னு                                                                         சொல்லலாமா?
   -மிஸ்கின ஆட்டியர்னு சொல்லலாமா?
   -தமிழனோட வாழ்க்கைய அப்படியே பதிவுசெஞ்சிருக்கிற முதல் படம்னு சொல்லலாமா?
    ...கூடாதுன்னு சாருவுக்கே நல்லாத் தெரியும்{என் பார்வையில் ஏன் கூடாதென்பதற்கான காரணங்களை நந்தலாலா குறைகளும், லாஜிக் ஓட்டைகளும் என்ற முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன்}
     மிஸ்கின் அவர் நண்பர் என்பதற்காகவும், நண்பர் படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காகவும், விமர்சனம் என்ற அவருடைய கூரான, அனுபவம் வாய்ந்த அறுவைச் சிகிச்சை கத்தியை தவறான முறையில் கையாண்டு, நந்தலாலாவுக்கு பொருந்தாத உலக கிளாசிக் \ எதார்த்தப் படம் என்ற செயற்கை உறுப்பை {சாருவின் பாணியில் குறியொன்றை என்று நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்} பொருத்தி ரசிகர்களை    ஏமாற்ற எழுதியுள்ளார் அந்த மாத இதழில்.      
    செயற்கை உறுப்பு பொருந்தாமல் அழுகி படம் பப்படமாகி, பாட்ஷா போல் ஓடாமல் பாச்சை போல் ஓடி ஒளிந்துகொண்டது.
     நந்தலாலா படத்துக்கு சாரு எழுதியது சுய சார்புள்ள, தன்நல நோக்குடைய, வியாபார நோக்குடைய, வளைக்கப் பட்ட, உண்மைக்குப் புறம்பான விமர்சனம். தார்மிகமாக அவர் இதற்கு வாசகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இனிமேல் அவர் எந்த படங்களுக்கும்{அது எத்தியோப்பிய படமாக இருந்தாலும் சரி} விமர்சனம் எழுதக் கூடாது.
       இந்த விமர்சனத்தை வெளியிட்டதன் மூலம் நடுநிலையை இழந்துவிட்ட அம்மாத இதழின் ஆசிரியர் அவ்விதழை ரூ 20 கொடுத்து வாங்கிய என் போன்ற நடுநிலையான உண்மையான செய்திகளை எதிர்பார்க்கும் வாசகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.
        இந்த மேட்டர கடுப்பாகி யோசிச்சுட்டு சட்டுன்னு எழுதவும் முடியாம, யாருமே கேட்காததால நமெக்கெதுக்குடா வம்புன்னு விடவும் முடியாம அல்லாடிட்டு என் நண்பரும், சக வலைபதிவருமான ராஜாகிட்ட  சொன்னா, அவரு "அட சாரு எப்பவும் இப்படித்தான், யாரும் அவர கண்டுக்க மாட்டாங்க, நீ இதுக்கெல்லாம் புதுசுல்ல அதன் உணர்ச்சிவசப்படற, சாரு மிஸ்கினோட யுத்தம் செய் படத்துல நடிக்கிறாரு, அதான் இப்படி மிஸ்கின அவர ...ட்டுத் திரியறாரு, லேட்டஸ்ட் நியூஸ் என்னன்னா புத்தக வெளியீட்டு விழாவுல அவருக்கும், மிஸ்கினுக்கும் முட்டிகிச்சாம் அவர் வலைத்தளத்துல மிஸ்கின திட்டி எழுத ஆரம்பிச்சுட்டாராம், நீ அதையும் படிச்சுட்டு அப்றமா கட்டுரை எழுது" ன்னு சொன்னாரு.
        அங்க போனா ஏதோ உலக அழகி படம் மாதிரி close upல யாரு... நம்ம சாரு போட்டோதான், அடங்கப்பான்னு உள்ள போனா செம காமெடி & கடுப்பு.
        அந்தக் கருமத்தையெல்லாம் அடுத்த பதிவுல தனியா போடறேன், ஏன்னா அல்ரெடி நீளமான பதிவாயிடுச்சு.                                                                                                                                                                                 

Monday, January 3, 2011

கதை தெரியாத காட்டின் கதை

ஒரு பெரிய காடு இருந்துச்சாம் 
காட்ல ஒரு சிங்கமிருந்துச்சாம்
அப்றம் ஒரு புலி இருந்துச்சாம் 
குரங்கு இருந்துச்சாம் 
நரி இருந்துச்சாம் 
மான் இருந்துச்சாம் 
முயல் இருந்துச்சாம் 
யானை  இருந்துச்சாம்     "ப்பா...ம்"   
பூனை  இருந்துச்சாம்    "ம்மியாயாவ்" 
எல்லாம் என்ன செய்தன, 
என்ன கதை
என்பதெல்லாம்    தெரியாததால் 
எதுவும் சொல்லவில்லை
எதையும் 
அவளும் கேட்கவில்லை
உறங்கிவிட்டிருந்தாள். 


அப்றம் எல்லாம்
நைட்டு  சாப்ட்டு
சமத்தா தூங்கிடுச்சாம்
என கதையை முடித்து
கன்னத்தில் முத்தமிட
உறக்கத்தில் சிரிக்கிறாள்   ஓவியா.

-நன்றி திண்ணை வார இணைய இதழ்.

ஆடை துறந்த ஞானி

அஞ்சு வயசாகுது 
ட்ரஸ்சே போட்டுக்க மாட்டேங்கறா... 
எம் மாமிய என்னத்  திட்றா,
என்ன புள்ள வளத்துருக்கேன்னு... 

பக்கத்து  வீட்டக்கா
பிராது கொடுத்தாள்
கண்ணாமூச்சி ஆட்டத்தோழியை
கண்டித்தேன் அழைத்து

வெட்கமாயில்லையா  உனக்கு 

அழகாய் சிரித்துக் கொண்டே
ஆடை துறந்த ஞானியென
அமைதியாய் திருப்பிக் கேட்டாள்

வெட்கமாயில்லையா  உனக்கு 

ச்சே...
ரொம்ப வெட்கமாய் போய்விட்டது.  

-நன்றி  திண்ணை வார இணைய இதழ்.