Monday, March 28, 2011

மலர்கள் மலரும்

ஒருவழிச் சாலையாகிவிட்ட
இருவழிச் சாலையொன்றில்
இருவரும் கடந்து செல்கிறோம்
எதிரெதிரே.

இன்னுமிருக்கும்
கண்ணுக்குப் புலப்படாத
பழைய தடுப்புச் சுவரில்
மலர்ந்திருக்கிறது
மழுங்கிய முட்களுக்கிடையில்
புதிய பூக்கள்.

ஒரு துரோகம்
ஒரு உதவி
ஒரு வாதை
ஒரு காதல்
ஒரு ஏமாற்றம்
ஒரு நம்பிக்கை
ஒரு குற்றவுணர்ச்சி
ஒரு தியாகம்
ஒரு கோபம்
ஒரு கண்ணீர்
அனைத்தின் எடையும்
கணந்தோறும் மாறுகின்ற
காலத்தின் நிரந்தர தனுசில்
நிலையற்ற முள்ளென
அதிர்கிறதுறவுகள்.

உன்னோடு போரிட்டு
என்குருதி சிதறிய மண்ணில்
புண் ஆறிப் பூத்திருக்கும்
உறுத்திய முட்களைக் கடந்த
புத்தம் புது மலர்கள்
உன் மண்ணிலும் மலரும்
காத்திருப்போம்... 

Friday, March 25, 2011

என்னமாதிரியான காலத்தில் வீழ்கிறோம்-உயிர்மை பதிப்பக வெளியீடு 10000001

      உயிர்மை பதிப்பகத்தின் 325 வது  வெளியீடாக புத்தக கண்காட்சி வசூலை முன்வைத்து வெளியிடப்பட்ட கார்த்திகா அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பு "இவளுக்கு இவள் என்றும் பேர்". மே 2008 முதல் செப்டம்பர் 2010 வரையிலான கவிஞரின் 77 கவிதைகள் நேர்த்தியான வடிவமைப்புடன், அழகான அட்டைப் படத்துடன், மனுஷ்யபுத்திரன் அவர்களின் சிலாகிப்பான பின்னட்டை உரையுடன், கவிஞர் அவர்களின் இயற்கையில் பாதி மறைந்த புகைப்படத்துடன் 50௦ ரூபாய்க்கு வெளியிடப்பட்டுள்ளமைக்கு உயிர்மை பாராட்டுக்களைப் பெற தகுதி பெற்றுக்கொள்கிறது.

     கார்த்திகா அவர்கள் வழி நெடுக அம்மா அப்பா, சிறுமிகள் நிறைந்த என் தெரு, விடுதிக் குறிப்பு-3, ஏன் அப்படி, உருகும் சொல், ஒவ்வொன்றும் ஒன்றும், முள்ளின் மனம், ஆரஞ்சுப் புன்னகை, மரபு வழிக் கதைகள், நத்தையின் சலனம், இவளுக்கு இவள் என்றும் பேர், தனிச்சுற்றுக்கு மட்டும், ரகசிய வாசல்கள், கனவில் வந்த தூக்கம், பொன்மாலைப்பொழுது ஆகிய கவிதைகளில் இன்னும் பல வருடங்கள், தீவிர உழைப்புக்குப் பின் நல்ல கவிதைகளை இவர் எழுதக்கூடும் என்ற சிறு நம்பிக்கை தருகிறார். இன்னும் நல்ல கவிதைக்கு அவர் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதால் உற்சாகமூட்டக்கூடிய பாராட்டுக்களை மட்டும் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 
          
     பெரும்பாலும் 4 அல்லது 5 வரிக்  கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பு ஒரு சிறிய பயணத்தின் பாதி நேரத்தில் படித்துவிடக்கூடியதாய் உள்ளது.
மிகச் சாதாரண வழமையான மழை, மழலை, விடுதிவாழ்க்கை, இயற்கை என சலிப்பூட்டக்கூடிய கருப்பொருள்கள், அதைவிட சலிப்பூட்டக்கூடிய வழமையான பார்வைகள் என வாசிப்பின் இறுதியில் அயற்சியும், கோபமும், சோர்வும் வருகிறது உயிர்மையின் மேல். 

      மனுஷ்யபுத்திரனின் பின்னட்டை உரை மற்றும் புத்தக நேர்த்தி, உயிர்மையின் இலக்கியத்தரம் என்ற அத்தனை பொய்களும் சாயம் போய் பல்லிளிக்கிறது வாசிப்பின் இறுதியில். பதிப்பகங்கள் வெளியிட தேர்வு செய்யும் படைப்புகளுக்குப் பின்னாலுள்ள அரசியலும், சிலாகிக்கும் பின்னட்டை உரைகளும் எரிச்சலூட்டுகிறது. ஆனால் ஒரு பதிப்பாளராக மனுஷ்யப் புத்திரனின் வியாபார யுக்தியும், அதற்கு இலக்கியத்தரம், முன்னணி இலக்கியக் கவிஞர் என்கிற அவரைப் பற்றி வாசகனின் பொதுப் புத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மதிப்பீடுகளை அவர் உபயோகப்படுத்திக் கொள்ளும் மதி நுட்பத்தையும் நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும்.

       இன்னும் இதுமாதிரி வீட்டுக்கு ஒருத்தராச்சும் பழைய டைரில, நோட்ல எப்படியும் கவிதை எழுதி வச்சுருப்பாங்க சார். நீங்க ஒவ்வொண்ணா வெளியிட்டாலும் கொறஞ்சுது ஒரு கோடி புத்தகங்கள, உங்க ஒரு கோடி பின்னட்டை விமர்சனத்தோட போடலாம். உங்க அந்த பின்னட்டை விமர்சங்களை எல்லாம் தொகுத்து என்னமாதிரியான காலத்தில் 
வீழ்கிறோம்னு தனி புத்தகமா உயிர்மை பதிப்பக வெளியீடு 10000001 ன்னு கெத்தா தலைகாணி சைசுக்கு நேர்த்தியா போடலாம்...டலாம்...லாம்... ம்.  

இப்பிடியே மைண்டைன் பண்ணுங்கப்பு, உங்க கல்லா புல்லா களகட்டும்.     

Monday, March 7, 2011

க(ணி\ன்)னிக் காமம்

செக்சுக்கு பதிலாய்
மேல் என மாற்றி
இளம்பெண்களுடன் அரட்டையடிக்க
இத்தனை ஆண்டுகளாய்
முட்டிக்கொண்டிருந்த
மீசை தாடி குறி நீண்டு
வளர்கிறதுமுளைத்து
முளைத்த முலைகள் 
சுருங்க.