Saturday, February 26, 2011

கருக்கல் வெளுக்கிறது
மதிய வெய்யிலில் 

மடை மாற்றச் சென்றுவிட்டு திரும்புகையில் 
சட்டெனக் கருத்து நனைக்கிறது இடியும் மின்னலும்

சித்தப்பா திருமணத்தில் சண்டையாகி
பேச்சுவார்த்தை நின்றுவிட்ட
மாமாவின் வீட்டருகே தயங்கியபடி 
மழையில் நனைந்து ஒதுங்க 
மிரண்டு குரைக்கிறது புதிய அல்சேசன் நாய்க்குட்டி

வெளிவந்த முறைப்பெண் முத்தழகு
உள்ளோடி குடையுடன் வந்து 
வாங்க மாமாவென கூட்டிப் போகிறாள் 
வற்புறுத்தி வீட்டுக்குள்

என்ன மாப்ளே வேத்தாள் மாதிரி வெளியவே நின்னுட்டீங்க
எளவு இந்த வானம் மாதிரிதானே மனசும்
மழையும் கோபமும் சட்டுன்னு வந்துட்டாலும் கஷ்டம்
வராமயே இருந்தாலுங் கஷ்டம்
சொல்லியபடியே எனக்குப் பிடித்த கறுப்புக் காப்பி போட்டு  
சொம்பில் நீட்டுகிறாள் அத்தை

கொஞ்ச நேரம் மழையில நின்னா
உங்க தலைகுள்ள  இருக்கிறது கரைஞ்சிடும் மாப்ளே எனக் 
கேலியுடன் தத்துவமும் உதிர்த்துச் சிரிக்கிறார் மாமா
உதடு கடித்துச் சிரிப்பை அடக்கியபடி 
ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டிருக்கிறாள் முத்தழகு
  
உறவுகளின் கதகதப்பில் குளிர் காய்கிறது உடலும் மனமும்
உள்ளும் புறமும் சூழ்ந்திருந்த கருக்கல் 
வெளுக்கிறது மெல்லமெல்ல.


Sunday, February 13, 2011

சில காதல் கவிதைகள்


1.பெரும் மழை   

விழிகளின் ஜன்னல்களில் 
தயங்கிப் பார்க்கிறது  
இதழ்களின் துடிப்புகளில்
தவித்து ஊமையாகிறது 
விரல்களின் நடுக்கங்களில்
ஒளிந்து மறைகிறது 
கால்களின் தயக்கங்களில் 
தேங்கி நிற்கிறது
ஒரு உதறு உதறிவிட்டுத்தான் போயேன் 
பெரும் காதல் மழையை 
நனைந்த சிட்டுக்குருவியென என்மேல்.

2.காதலென்று 

மௌனத்தின் உதடுகளால் பேசுகிறேன்
வெட்கத்தின் காதுகளால் கேட்கிறாய்
நான் சொல்லத் தயங்கியதும்
நீ கேட்கத் தவித்ததும்
இச் சிறப்பிதழில் அச்சேறுகிறது
ஆதி மொழியில் காதலென்று. 

3.ஆதிக்கனி 

கவனிக்காமல் விட்டுவிடுவார்களோயென்ற கவலையில்
கடிக்காதேயென்று கைகாட்டிய கடவுளின் கருணையால் 
ஆதிப்பெண் கடித்த பாதிக்கனி 
இன்னும் இனிக்கிறது உன் இதழ்களில். 

4.ஆறுதலற்றவன் சொல்லும் ஆறுதல்

கல்லூரிப் பேருந்துக்காக காலையில் காத்திருக்கையில்
நீ பேசிச் சிரிக்கும் கொன்றை மரம்
பூக்களுடன் இலைகளையும் உதிர்த்துவிட்டு... 

எப்பொழுதும் நீ 
மடியில் அமர்ந்து தோளில் சாய்ந்து கொள்ளும் 
ஜன்னலோர முதல் இருக்கை
தாங்கமுடியாத பாரத்துடன் வெறுமையாய்...

இறங்கியதும் நீ தலைகுனிந்து ஒருகணம்
தினம் வணங்கும் மரத்தடிப் பிள்ளையார்
தெருவையே  வெறித்தபடி...

செமெஸ்டர் லீவ் முடிந்து சீக்கிரம் வந்துவிடுவாயென
எல்லோருக்கும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறேன் 
இதுவரை நீ ஒருபொருட்டாய் மதித்திடாத நான்.

5.அம்மாவுக்கு எல்லாந் தெரியும்

எல்லோரையும் பார்க்க ஆசைப்பட்டு
நோட்டுவேனுமென்று நீ வீட்டுக்கு வந்துபோன இரவு
நல்ல லட்சணமான பொண்ணுதாண்டா       
மொதல்ல ஒழுங்கா படிச்சு ஒரு வேலைய தேடிக்க கண்ணு
உன்விருப்பத்துக்கு யாரும் குறுக்க நிக்கமாட்டோமென்றஅம்மாவிடம் அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா என்றதுக்கு சும்மார்றா மொசப்புடிக்கிற  நாய மூஞ்சியப்பாத்தா தெரியாதா என்றாள்
உன்முகமா என்முகமா யார்மூஞ்சி காட்டிக் கொடுத்ததென்று 
நானும் கேட்கவில்லை அம்மாவும் சொல்லவில்லை.

6.சிறகு நனைந்த தேவதை சொன்னது 

ஓரப்பார்வையில் மின்னல் மின்ன 
இதயக் கூட்டுக்குள் இடி இடிக்க 
நீ மழையாய் வந்தாய்

கண்களில் கானல் காய 
நெஞ்சுக்குள் தாகம் பாய 
நான் வெயிலாய் வந்தேன்

நாம் சந்திப்பில் பிரிந்த ஒளியின் வண்ணங்களை 
எல்லோரும் வானவில் என்க
இல்லையிது காதலென்று காதோடு சொல்லிப் பறக்கிறது
சிறகுகள் நனைந்த தேவதையொன்று.
 

Tuesday, February 8, 2011

ஒரு கறுப்புப் பூனையும் ஆறு கோப்பை மதுவும்

ஒரு பூனையின் எலும்புகள்
அவ்வளவு இலகுவானது
நீதிமன்றங்களின் சட்டங்கள் போல
நவீன இலக்கியம் போல
உயிர்மெய்யின் "லு" போல
பல கோணங்களில் வளையக்கூடியது

ஒரு பூனையின் உடல்
அவ்வளவு மென்மையானது
பிறந்த குழந்தையின் பிருஷ்டம் போல
வளர்ந்த பெண்ணின் மார்பைப் போல
காதலியின் கன்னங்களைப் போல
தொட்டுப் பார்க்கத் தூண்டுவது.

ஒரு பூனையின் கண்கள்
அவ்வளவு உயிர்ப்பானது
பேரழகு கொண்ட கள்ளக் காதலி போல
அசையும் பாதரசத்தைப் போல
சிமிட்டும் நட்சத்திரத்தைப் போல
இரவிலும் ஒளிரக் கூடியது

ஒரு பூனையின் உதடுகள்
அவ்வளவு சிவப்பானது
பருவமடையாத சிறு பெண்ணின் யோனி போல
பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைப் போல
கொலை செய்யப்பட்டவனின் ரத்தத்தைப் போல
ரகசியமாய் முத்தமிடத் தூண்டுவது.

ஒரு பூனையின் குரல்
அவ்வளவு இனிமையானது
பெண்குழந்தையின் சிரிப்பு போல
ஆண் குழந்தையின் அழுகை போல
மனைவியின் சிணுங்கல் போல
அம்மாவின் ஆசிர்வாதம் போல
நேரடியாய் இதயம் நுழைவது.

ஒரு பூனையின் இருப்பு
அவ்வளவு நியாயமானது
பறவையின் சிறகு போல
கடவுளின் பல கரங்கள் போல
பூக்களின் தேன் போல
தவிர்க்க இயலாதது.

கடவுளும் உறங்கிவிட்ட இந்த சபிக்கப் பட்ட இரவில்
என் காரின் குறுக்கே பாய்ந்த கறுப்புப் பூனையின் உயிரும்
அவ்வளவு அபூர்வமானது
கடந்துவிட்ட அந்த நொடியைப் போல
அழகிய முதியவளின் இளமையைப் போல
கருக்கலைப்பு செய்யப்பட்ட குழந்தையைப் போல
கதறி அழுதாலும் திரும்ப வராதது.

இந்தப் பொன்னிற மது
அவ்வளவு ஆச்சர்யமானது
மந்திரவாதியின் மந்திரக்கோல் போல
நல்ல புணர்ச்சியொன்றின்  உச்சத்தைப் போல
கடுந் தவத்துக்குப்பின் அடைந்த உன்மத்தம் போல
தற்கொலை செய்து கொண்டவனின் இறுதி நொடி போல
நூறு பூனைக் குட்டிகளின் மூச்சுப் போல
சூடானது இதமானது மயங்கவைப்பது
நம்மை நாமே மன்னிக்குமளவு கருணையேற்றுவது
எல்லாம் வல்ல கடவுளாக்குவது

ஆறாவது கோப்பையின் இறுதியில்
தானாக தரையில் விழுந்து
நானாக சிதறுகிறேன் நூறு பூனைகளாக
குறுக்கே பாய்ந்த கறுப்புப் பூனையென
உருமாறிய என்குறி 
"i am back" என ஆங்கிலத்தில் கத்தியபடியே
அடுத்த அறைக்குள் நுழைகிறது 
அது பிள்ளைகள் உறங்கியபின்
பின்னிரவுக் காமத்துக்காக காத்திருக்கும்
என் மனைவியின் படுக்கை அறை.

Monday, February 7, 2011

சிறுமியிடம் மாட்டிக்கொண்ட வறுமையும், மனிதாபிமானமும்


தட்டைத் தட்டியெழுப்பிய
தாயின் தாளத்துக்கு 
இடுப்பசைத்து மெலிதாய் ஆடியபடி
கழுத்தை நெரித்துத் தொங்கிய 
கம்பி வளையத்தை
தோள்களைக் ஒடுக்கி,
நெஞ்சைக் குறுக்கி, 
வயிற்றைச் சுருக்கி,
கால்வழியேயெடுத்து
கக்கத்தில் வைத்துக்கொண்டு 
சில்லறைத் தட்டை 
தாயிடம் கொடுத்துவிட்டு 
தவழும் தம்பியுடன் 
சிரித்து விளையாடுகிறாள் 
வித்தை காட்டிய சிறுமி.
கழுத்தை நெரித்து  விடவேண்டுமென 
கங்கணங் கட்டி வந்த வறுமையும்,
உதவி விட்டதாய்ச் சத்தமிடும் 
சில்லறைகளின் மனிதாபிமானமும் 
மாட்டிக்கொண்டு முழிக்கின்றன  செய்வதறியாமல், 
கக்கத்தில்  வைத்திருந்த கம்பி வளையமாய்.

-நன்றி திண்ணை இணைய இதழ்.
-நன்றி பதிவுகள் மாத இணைய இதழ்     

Wednesday, February 2, 2011

பதங்கமாதல்


சாத்தானால் ஆசீர்வதிக்கப் பட்ட இந்த
சாமத்தின் நடுவினில்
சுழலும் மின்விசிறியின் சிறகுகளிலிருந்து
அறைமுழுதும் இறங்கிப் பரவுகிறது
இறந்த காலத்தின் வெம்மை

இரவு விளக்கொளியில்
சுவற்றில் நெளியுமென் நிழல்
இருண்டு கிடக்கிறது
ஒளியைப் பற்றிய நம்பிக்கைகள் பொய்த்து

அடைக்கப் பட்ட ஜன்னலுக்கு வெளியே
பாடிச் செல்லும் பைத்தியத்தின் குரல்
ஏனோ போதை ஏற்றுவதாகவும்
கிளர்ச்சி யூட்டுவதாகவும் இருக்கிறது

ஆழ்ந்து தூங்கும் அதிகாலையில்
உங்கள் ஜன்னலுக்கு வெளியே பாடும் குரல்
இன்று ஒரு பறவையுடையதாகவும்
நாளை என்னுடையதாகவும்
பிறிதொருநாள் உங்களுடையதாகவும் இருக்கலாம்.

-நன்றி உயிரோசை வார இணைய இதழ்.