Tuesday, September 21, 2010

மலர்தல்

மிதிக்கப்படுதலிலும்
ரசிக்கப்படுதலிலும்
பிரக்ஜையற்று
பூத்துக்கொண்டேயிருக்கின்றன    
பாதையோரத்துப் பூக்கள்...  
   

மனம்

மலர்களின்
வண்ணத்திலும்
வாசத்திலும்
தங்கிடும் மனம்
வேர்களைப்பற்றிய
விசாரணை ஏதுமற்று.     

நாய்.

அரிப்போ
ஆசையோ
தன் குறியை
தானே நக்கியபடி
நாய். 

மந்திர மல்லி

வேலைக்குச் செல்லும் வேளையில்
மின்சார ரயில்நிலையத்தின் வெளியே
"ரெண்டு மொழம்  அஞ்சு ரூபா
மல்லி, மல்லி..."
கூவிக் கொண்டிருந்தாள்
ஒரு சிறுமி.

வேலை முடிந்த மாலையில்
அதே இடத்தில் அச்சிறுமி
"நாலு மொழம் அஞ்சு ரூபா
மல்லி, மல்லி..."
கூவிக் கொண்டிருந்தாள்.

அது
அரைநாளில்
இருமடங்காகும்
மந்திர மல்லி
அச்சிறுமி
ஒரு தேவதையாக
அந்நிலமை
ஏதேனும் சாபமாகவும்
இருக்கக் கூடுமென்றேன்
ஒருவரும் நம்பவில்லை
சிரித்துச் செல்கிறார்கள்.
           

Tuesday, September 14, 2010

காதல்

அன்பு, பாசம், நட்பு
அறிவியல் ஈர்ப்பு...
காதல் போல்
பொருந்தவில்லை எதுவும்
நீள் கடலுக்கும்
நீரில்லா நிலவுக்குமான
உறவை விளக்க. 

தொடரும் வாழ்வு

மழையில்  ஜனனம்
ஒளியில் மரணம்
தரையில் நிழலாய்
தொடரும் வாழ்வு
தெருவிளக்கினுள்
விட்டில் பூச்சிகள்.   

மழைநேர்மை

தெருவெங்கும் குழிகளில்
சிரிப்பாய் சிரிக்கிறது
மழையின் நேர்மையும்
மனிதனின் கயமையும்.   

ஆம்புலன்ஸ்

வாகன  நெரிசலில்
அழுது அரற்றியபடி
கெஞ்சி வழிகேட்டு
போய்க்கொண்டிருக்கிறது
ஒரு உயிர்
ஆம்புலன்சாய்.    

பயணப்பரிசு

வாகன இரைச்சலையோ
ஜன நெரிசலையோ மீறி
டிரைவருக்கு கேட்கவேண்டி
என் காதருகே வீரிய
கண்டக்டர் விசிலின் சப்தம்
இறங்கிய பின்னும்
இடது காதில்
சில எச்சில் துளிகளுடன்.      

இங்கிதம்

பெருங்காதலை
பேருந்துச் சுவரெங்கும்
உரையிலும்
கொடுங்காமத்தை
பொதுக் கழிவறைச் சுவரெங்கும்
படங்களுடனும்
விளக்கி வைத்திருக்கும்
இந்திய இளைஞர்கள்
இங்கிதம்  மிக்கவர்கள்.

ஒன்றாதல்

பெய்யும் மழைக்கஞ்சி
பயணிகள் நிழற்குடைக்குள்
ஒடுங்கி
ஒன்றாயிருக்கிறார்கள்
ஒரு செம்மறியாடும்
சில மனிதர்களும்.    

சுவர்மழை

வீட்டுச் சுவர்களில்
இன்னும்
வழிந்துகொண்டே
இருக்கிறது
எப்பொழுதோ பெய்த
பெருமழை
சில ஈர நினைவுகளுடன்
காய்ந்த கறுப்புக் கோடுகளாய்.  

தவம்

உறுமீன் தேடியோ
பெருமழை வேண்டியோ கூட்டமாய்
ஒற்றைக்காலில் தவமிருக்கும்
கொக்குகள்.    

சாலைவிதி

அண்ணாநகரின்
ஐந்தாவது குறுக்குத் தெருவில்
பைக்குடன் விழுந்தபோதுதான் தெரிந்தது
பாதசாரிகள் சாலையில்
இடப்புறம்தான் செல்லவேண்டுமென்பது கூட
இன்னுஞ்சில
எருமைகளுக்குத் தெரியாதென்பது

புரிதல்

கொட்டும் பனிக்கும்
கொஞ்சம் பார்வைக்குமாய்
நான் அணிந்திருந்த
குல்லாவை
புரிந்து கொள்ளாமல்
அழுகிறது
பக்கத்து இருக்கை
குழந்தை. 

-நன்றி திண்ணை இணைய இதழ்  
   

பச்சையாய்ப் படர்ந்து
வெள்ளையாய் பூத்து
அழகாய்த்தான் இருக்கிறது
பள்ளிக்கரணை குளத்துநீர்
குடிக்கவோ குளிக்கவோ இயலாதெனினும்