Wednesday, October 27, 2010

ருத்ரதாண்டவம்

வாகனங்களின் நெரிசலில்
வழிகேட்டு ஊர்ந்தபடி
ஒரு தெருவில்
சவ ஊர்வலம்
மறு தெருவில்
சிவ  ஊர்வலம்

உறவுகள் அழுது  திரும்பிய
ஊரடங்கி ௨றங்கிய
பின்னிரவின் ஜாமத்தில்
நாடகம் முடிந்த களிப்பில்
வேடம் கலைத்து
இருவரும் இணைந்து
ஆனந்தத்தில்
ஆடிக்கொண்டிருக்கக் கூடுமொரு
ருத்ரதாண்டவம்
எரிந்து முடிந்து
கனன்று கொண்டிருக்கும்
கொள்ளிக்கட்டைகளின்
இளஞ்சிவப்புக்
கங்குகளின் வெளிச்சத்தில். 

-நன்றி திண்ணை இணைய இதழ்  
  

மழை விதைத்தவை

இரவு பெய்த மழை 
சாலையில் குழிகளை 
துளி ஏருகளால்
உழுது சேறாக்கி
ஒவ்வொன்றிலும் 
விதைத்துச் 
சென்றிருக்கிறது 
ஒரு நிலவையும் 
சில நட்சத்திரங்களையும்.  

ஒன்றாதல்

பெய்யும் மழைக்கஞ்சி
பயணிகள் நிழற்குடைக்குள்
ஒடுங்கி
ஒன்றாயிருக்கிறார்கள்
ஒரு செம்மறியாடும்
சில மனிதர்களும்.   

புரிதல்2

உழைத்த களைப்போ
உறவுகளின் மீதான சலிப்போ
தூங்கித் தோள்சரியும்
சகபயணி
அவராய் நானும்
நானாய் அவரும்
இருந்திருக்கவோ
இருக்கவோ கூடும்.
   

Sunday, October 24, 2010

கங்காரு குப்பைத் தொட்டியும் உங்கள் குழந்தைகளும்

சிரிக்கும் விழிகளுடனும்
மலர்ந்த இதழ்களுடனும்
அணைக்க அழைக்கும்
விரிந்த கரங்களுடனும்
பொதுஇடங்களில் நிற்பவைகளின்
இதழ்களுக்குள் துப்பிவிட்டும்
நெஞ்சுக்குள் குப்பைகளை எறிந்துவிட்டும் கடந்துசெல்லும்
உங்களை
கவனித்துக்கொண்டுதான்
உடன் வருகிறார்கள்
விலங்குகளையும் பொம்மைகளையும்
உயிராய் நேசிக்கும்
உங்கள் குழந்தைகள்.

-நன்றி திண்ணை இணைய இதழ்  
       

Saturday, October 23, 2010

நகரியல்பு

எத்தனை  முறை
சுத்தப்படுத்தினாலும்
குப்பையகிவிடுகிறது
மாநகரில் சாலையும்
மனதும்.  

Friday, October 22, 2010

பரிபாஷை.

எத்தனைமுறை கேட்டாலும்
புரிவதேயில்லை
இரயிலுக்கும் தண்டவாளத்துக்குமான
பாஷை.

உயிர்த்தெழுவேன்

புதைதல் விதியென்றிறை புதைத்தினும்
புவிமுளைத் தேகுமொரு விதையாய்
பொறுத்தைம் புலன்கூப்பித் துளிர்த்தெழுவேன்
உறவே நகைத்த லொழி.                      

தொலைதூரத் தொடுவானத்துள் தொலைந்தவை





பார்த்துக்கொண்டிருந்தபோதே
தொலைதூரத்
தொடுவானத்துள்
தொலைந்ததொரு
பறவையும் -என்
பார்வையும்.