Tuesday, January 17, 2012

ஒரு அகாலத்தின் ஆரம்பமும் முடிவும்

நீள் உறக்கம் களைத்து
விழிப்படைந்த இவ்வேளையில்
பண்பலையின் மெல்லியபாடல்
அருவமாய் பரவுகிறது
அடர்பனியின் குளிருடன்   

நகரும் வரிகளோடிய
நெடிய பாலையில்
கண்ணில் கானல் நீர் மின்ன நெளியும்
தகிக்கும் தனிமை அரவத்தை
கழுகென  கொத்தித் தின்கிறது
கிளைஇலைகளில் மறைந்து பேசும்
பறவைகளின் பேரொலி

ஜன்னலில் விரியும் ஆதிமரம்
அசைவுகளை நிறுத்தி
உறைந்த கணத்தில் நிகழ்கிறது
ஒரு அகாலத்தின் ஆரம்பம்

நடுங்கி அலறிய
கைப்பேசி அலாரத்தில்
சட்டென உயிர்த்து
கவிகிறது காலம்
என்மேல்
கட்டமைத்துக்கொண்டிருக்கும்
தன்வரலாற்றின்
அத்துனை சுமைகளுடனும். 
 

Wednesday, January 11, 2012

நட்சத்திரமொன்றின் தற்கொலை

குறியும் கொண்டையுமற்று
மேஜையில் ஆறும் ஆப் பாயில்
ஆணா பெண்ணா

வயிற்றுக்குக் கீழ் ஓட்டிப் பிறந்த
ஆண் பெண் குழந்தைகள்
அர்த்தநாரியா

வானத்தில் ஊர்ந்து ஊர்ந்து செல்லும்
வாலற்ற பல்லி 
நெருங்கி விழுங்குகிறது நிலவை

நட்சத்திரமொன்றின் தற்கொலை
இபோது வரையிலும் 
எரிமீனெனவே எண்ணப்பட்டது
பூமியில் இருந்தபடிக்கு.           


Saturday, January 7, 2012

தொடரும் முற்றுப் புள்ளி

வெளியேறும் வழிகளடைக்கப்பட்ட
உன் வட்டத்துள்
மையப் புள்ளியாகச் சொன்னாய்

எப்போதும் பிரிந்தே இணைந்து செல்லும்
இணைகோட்டுக்கான என்னிசைவுகளை
எழுதி மொழிபெயர்த்தேன்
எறவாரப் பல்லியின் சமிக்ஞைகளாக

சுவர் சூழ்ந்த அறைகளில்
இருவருக்கும் உரிமையொன்றே சதுரமென்றாய்
கொஞ்சம் இறங்கிவந்து
சற்றெனக்கு நீளம் தந்து செவ்வகமென்றாய்.  

இருவருக்கும் பொதுவானதொரு
உறவுக்கான உருவத் தேடலில்
எதிர்பார்ப்புப் புள்ளிகளிளெல்லாம்
முட்டிக்கொண்டு வெட்டிச் சென்றோம்
முக்கோணமாய்

முயற்சிகளிலோய்ந்து நீ
முற்றுப்புள்ளியிட்டுச் சென்றுவிட
கமா இட்டுக் காத்திருக்கிறேன்
வரையறைகளற்ற வாழ்வுக்காய்
வானில் தொடரும் முற்றுப் புள்ளியென
பறவையை எண்ணியபடி.