செய்ததையே செய்து சலித்த
மனப்புழுக்கத்தில்
சட்டென எழுந்தது
ஏன், எதற்கு, எங்கே போகிறோமென்ற கேள்வி.
தவழ்ந்து தழுவிய
தென்றலைக் கேட்டேன்
தெற்கிலிருந்து வடக்கே போகிறேன்
வடக்கிலிருந்து தெற்கே வருவேன் வாடையா
இலேசா இருக்கிறதுதான்
நல்லது, இதமானதுன்னு தெரியும்
உன்னோட கேள்விய
என்னோட நண்பன்
மரத்த கேள் என்றது.
அசைந்தபடியிருந்த
மரம் சொன்னது
வளர்றேன், பூக்கறேன்,
காய்ச்சுக் கனியறேன், கருகிறேன்,
மறுபடியும் விதையிலிருந்து வளர்றேன்
எப்பவும் யாருக்காச்சும்
உபயோகமா இருக்கனும்
செத்தாக்கூட விறகா...
நீ வேணா மண்ணக் கேள்
ஏன்னா என்னையே அதான் தாங்குது.
ஆதி மௌனத்தை
ஆதி மௌனத்தை
அடைகாத்துக்கொண்டிருந்த
மண் சொன்னது
மலையாவேன் , மரமாவேன்,
மனிதனாவேன், விலங்காவேன்,
மடிஞ்சு மக்கி
மறுபடியும் மண்ணாவேன் , பொன்னாவேன்
மார்றதும், எல்லாத்தையும் தாங்கறதும் தான்
நான் கண்டுபுடிச்ச உண்மை
வேறெதுவும் எனக்குத் தெரியாது
தெரிஞ்சுக்கவும் ஆசையில்ல
எனக்குள்ள நொலஞ்சு
என்ன கொழைக்கிறது தண்ணிதான்
அதவேனா கேட்டுப்பாரு...
சலசலத்த நீர் சொன்னது
ஓடையாவேன் , குளமாவேன்,
ஏரியாவேன், ஆறாவேன், கடலாவேன்,
ஆவியாகி மேலபோயி மேகமாவேன்,
மறுபடியும் மழையாகி கீழ வருவேன்
எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
நகர்ந்திட்டே இருக்கனும்
இல்லாட்டி நாறிடுவோம்கிறதுதான்
நீ கேக்கிற கேள்வியெல்லாம்
எனக்கு தோனுனதே இல்ல
என்னவிட பலசாலி நெருப்பு
அத வேணா கேட்டுப்பார்.
ஒரு குழந்தையின் சடலத்தை
கோபத்துடன் எரித்துக்கொண்டிருந்த
நெருப்பு சுட்டது,
எல்லாத்தையும்
எரிச்சு சுத்தமாக்கிறதுதான் என் வேலை
வேறொன்னும் எனக்குத் தேவையுமில்ல
ஒழுங்கா ஓடிப்போய்டு
இல்ல... உன்னயும் எரிச்சுடுவேன்.
சோர்ந்து படுத்தவனைப்
பார்த்துச் சிரித்தது வானம்
உனக்குத் தெரியுமா?
சிரிப்பை நிறுத்திவிட்டுச் சிந்தித்த
வானம் சொன்னது
எதையும் கொஞ்சம் தள்ளி மேலிருந்து பார்த்தா
எதுவுமே பெரிசில்ல, முக்கியமுமில்ல
நீ கேக்கிற கேள்விக கூடத்தான்
சின்ன சிறகால என்னயே கடக்கிற
பறவைய கேளேன் என்றது.
சிறகுகள் படபடக்க
பறவை சொன்னது
உடல் தேவைகளுக்காக மட்டும்தான்
எல்லாமே இருக்கிற பூமிக்கு வர்றேன்
எல்லா ஈர்ப்புச் சக்திகளுக்கும் எதிரா
உயரங்களுக்குப் பறக்கிறதும்
அடைய ஆசையில்லாம தேடறதும் தான்
நா நம்பற உண்மை
உன்னோட கேள்விகள
உன்னப் படச்ச கடவுள் கிட்டயே
கேட்டுடு என்றது.
கட்டியிருந்த ஆடையின் கிழிசல்களை
காதறுந்த பழைய ஊசியால்
தைத்துக் கொண்டிருந்த கடவுள்
நிமிர்ந்து பார்த்தார்
பரிதாபமாய்
ஒண்ணுந் தெரியாத குழந்தையும்
எல்லாந் தெரிஞ்ச நானும்
ஒண்ணுதான்...
அறியாமையோட ஆரம்பப் புள்ளியும்
அறிதலோட முடிவுப் புள்ளியும்
ஒண்ணுதான்...
ஞானங்கிறது ஒரு வட்டம்,
முழுமையான வட்டம்,
சூன்யம்...
அதனால...
இப்ப நானொரு
ஞானசூன்யம்
என்னோட எதிர்பிம்பம்
எதுவுந் தெரியாத குழந்தைகள்தான்
அவங்க கிட்ட கேட்டு
கொஞ்சம் எனக்கும் சொல்லேன் என்றார்.
ஆர்வமாய் இறங்கிவந்த நான்
அவசரமாய் ஓடிக்கொண்டிருந்த
ஒவியாவைப்
பிடித்து நிறுத்திக் கேட்டேன்
ஏன், எதற்கு, எங்கே போகிறாயென...
கண்களில் மின்னிய கண்ணீரில்
சூரியன் மிதக்க
ஓவியா சொன்னாள்
வுடுங்க அங்கிள்...
பயங்கர வயித்து வலி...
அவசரமா ஆயிருக்கப் போறேன்.
2 comments:
நீண்ட கவிதை! தொடருங்கள்!
nanri devan mayam
Post a Comment