Saturday, December 25, 2010

நந்தலாலா விமர்சனமும், சாருவின் தரங்கெட்ட அரசியலும்- பகுதி-1

கதை           
             பால்ய காலத்தில் தாயால் மனநல காப்பகத்தில் சேர்த்துவிடப்பட்டு, புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக கருதும் மனம் பிறழ்ந்த ஒரு முதிர் இளைஞனும், அதே வயதில் புரியாத சூழ்நிலையால் தாயை பிரிந்து வாழ நேர்ந்த ஒரு சிறுவனும் எதிரெதிர் மன நிலையுடனும்,  காரணங்களுடனும் தங்களது தாயைத் தேடி மேற்கொள்ளும் ஒரு நீண்ட ஒற்றைப் பயணமும், சந்திக்கும் மனிதர்களும், இறுதியில் தங்கள் தாயை கண்டடைவதுமே கதை.
               மிக அழுத்தமான கதையென்று சொல்லமுடியாத நல்ல ஒற்றை வரிக் கதை. எனினும் கதையே இல்லாத அல்லது அரதப் பழசான கதைகளையே அரைக்கும் பெரும்பாலான தமிழ் சினிமாக்களுக்கு நடுவில் நல்ல கதையென்று தாரளமாக சொல்லலாம்.
             ஜப்பானிய திரைப்படமொன்றின் தழுவல் \ அப்பட்டமான காப்பி என்ற விவாதங்கள் எழுந்துள்ளது குறையே எனினும் தெலுங்கு \ ஹாலிவூட் மசாலாக்களை தழுவல் \ காப்பி செய்வதற்கு இது எவ்வளவோ மேல் மற்றும் தமிழ் சினிமாவின் இன்றைய நிலைமைக்கு மிகவும் தேவை என்றே கூறலாம்.   ( அந்த ஜப்பானிய சினிமாவை நான் இன்னும் பார்க்கவில்லை.)

திரைக்கதை 
               பல சிறிய தவறுகளும், சில சினிமாத் தனங்களும் தவிர்த்துப் பார்த்தால் ஒரு தரமான \ யதார்த்த சினிமாவை தர முயல்கிற மிகச் சிறந்த திரைக்கதையே இப்படத்தின் மிகப் பெரிய பலம்.
               சினிமாக்களின் வழக்கமான (ஹீரோ, ஹீரோயின்,வில்லன்,கேரக்டர் ஆர்டிஸ்ட்) பாதையிலிருந்து விலகி பெரும்பான்மையான கதாபாத்திரங்களை  அன்பு vs வெறுப்பு, கோபம் vs பாசம், வில்லத்தனம் vs குழந்தைத்தனம், பைத்தியக்காரத்தனம் vs புத்திசாலித்தனம், ஏக்கம் vs நிறைவு, தனிமை vs உறவு என உணர்வு இருமைகளுக்குள் இடைவெளியை குறைத்தும்,நெகிழ்த்தியும் ஊசலாட விட்டு, எதார்த்த மனிதர்களை ஹைக்கூ கவிதை போல சிக்கனமான காட்சிகளின் மூலம் செல்லுலாய்டில் செதுக்கியிருக்கும் திரைக்கதைக்காக மிஸ்கினுக்கு இருகை நிறைய கூழாங் கற்களை அள்ளிக் கொடுக்கலாம் பரிசாக.

வசனம்   
               ஒன்றிரண்டு இடங்களைத் வேறு எங்கேயும் வாழ்வை \ அன்பை  விளக்குகிற மேதாவித்தனமான வசனங்கள் ஏதுமற்று இயல்பான உரையாடல்களில், காட்சிகளுடன் சேர்ந்து மெல்லிய அழுத்தத்துடனும், மெல்லிய கிண்டலுடனும் உணர்வுகளை சொல்லிச் செல்கிற வசனங்கள் பலம் என்றும் அல்லது (சாதாரண திரைப்பட ரசிகனுக்கு )  பலவீனம் என்றும் சொல்லலாம்.

டைரக்ன்     
            இத்தகைய கதை, திரைக்கதை, வசனம் என்பதை தேர்ந்தெடுத்ததற்கே டைரக்டர் மிஸ்கினுக்கு ஒரு சபாஷ். ஆனால் ஒரு முழுமையான எதார்த்த படமென்றோ \ உலகத்தரமான திரைப் படமென்றோ  ஏற்ற்றுக் கொள்ள முடியாதபடி சில பெரிய தவறுகளும், பல சிறுசிறு  தவறுகளும்,சில சினிமாத் தனங்களும் தடுப்பதால் இதை நல்ல படம் என்றும் மிஸ்கினுடைய 3 படங்களில் சிறந்த படம் என்றும் கூறலாம். படிமத் தன்மையுடனும், கவிதைத் தன்மையுடனும்  ஆடியன்ஸ்களின் கற்பனைக்கே விட்டுவிடும் சில காட்சிகள் தனித்தன்மையானவை, தமிழுக்கு புதிது.
            நம்பிக்கை அளிக்கிறார். ஆனால் உலகத் தரத்தை அடைய அவர் செல்ல வேண்டிய தூரம் அதிகம்,   இனிவரும் படங்களில் பார்க்கலாம்.

ஒளிப்பதிவு    
              யதார்த்த \ உலகத் திரைப் படங்களின் மொழியை முடிந்த அளவு முதல் காட்சியிலிருந்தே பேசுகிறது கேமரா. பெரும்பாலான காட்சிகளில் பின்புலமாக விரியும் பரந்த வானம் அழகு.
                தாயை தேடிச் செல்வதற்க்கான எதிரெதிர் மனநிலைகள் தெரிய வரும் பயணத்தின் ஆரம்பக் காட்சியில் சிறுவன் அகி,  பாஸ்கர் மணியை சாலையின் வெள்ளைக் கோடுகள் பிரிப்பது, பிரம்மாண்டமான ஒரு மரத்தின் வேர்களை கால்கள் போல் காண்பிப்பது ஆகியவை தனித்தன்மை.
               கால்களைக் காண்பிப்பதில் ஒருசில இடங்களைத் தவிர பல இடங்களில் கால்கள் வேறு உணர்வுகளை எழுப்பாமல் வெறும் கால்களாகவே நின்றுவிடுவது மைனஸ், சற்று குறைத்திருக்கலாம்.

எடிட்டிங் 
              பரபரப்பான திருப்பங்கள், திடுக்கிடல்கள் ஏதுமில்லாமல் மெதுவாக நகரும் திரைக்கதையில் காட்சிகளின் நீளம் கனகட்சிதம்.  இல்லாவிட்டால் இழுவையாக, நெளிய வைத்திருக்கும்.
             சிறுவன் அகி வீட்டில் தாய்மை பற்றிய ப்ரோக்ராமை டிவியில் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியை கட் செய்து மனநல விடுதியில் டிவி உடைக்கப் படும் காட்சியும் பாஸ்கர் மணியின் அறிமுகமும் அவனும் அதே ப்ரோக்ராமை பார்த்துக் கொண்டிருந்ததும், அம்மா மேலிருந்த வெறுப்பும், அதனால் டிவியை உடைத்து விட்டதுமான அத்தனை தகவல்களும் தேர்ந்த ஒரே கட்சாட்டில் சொல்லி புரிய வைத்துவிடுகிறார், சபாஷ்

நடிப்பு  
           முதல் படம் என்று சொல்லமுடியாத அளவுக்கு, கடினமான வேடத்தில், அதிகம் நடிக்க முயற்சி செய்து கெடுத்துவிடாத அளவான நடிப்பு, தாராளமாய் மிஷ்கினை பாராட்டலாம்.
          ஒன்றிரண்டு இடங்களைத் தவிர வேறெங்கும் குறை சொல்ல முடியாத நிறைவான, அளவான சிறுவன் அகியின் நடிப்பும் நன்று.
           சின்னச்சின்ன கேரக்டர்களில் வந்தாலும் வீதி வாட்ச்மேன் பெரியவர், ஆட்டோ டிரைவர், போலீஸ், உடல் ஊனமுற்றவர், ஸ்கூல் பெண், மாட்டுவண்டிப் பெரியவர், பம்ப் செட் பெரியவர், தேனிலவு ஜோடி என அனைவரின் நடிப்பும் கச்சிதம். 
             விபச்சாரப் பெண்வேடத்தில் ஸ்னிக்தாவின் நடிப்பு அக்கேரக்டருக்கு பொருந்தாமல் கொஞ்சம் நாடகத் தனத்துடன் இருக்கிறது. 
             பைக்கில் வரும் இரு குண்டர்கள் நம்ம ஊருக்கு ஒட்டாத தோற்றம், ஜப்பானின் சுமோ வீரர்கள் போன்று இருக்கிறார்கள். 

இசை
             இசை- இளையராஜா என டைட்டில் கார்டில் முதல் இடம் கொடுத்திருப்பதிலேயே இசைக்கு இத்திரைக்கதையில் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பது புரியும். ஆனால் இசையை கடைசியில் விமர்சனம் செய்யுமளவுக்கு இளையராஜா ஏமாற்றியிருக்கிறார்.
             உணர்வுகள் நடிப்பு மூலமாகவோ, வசனங்கள் மூலமாகவோ அழுத்தமாக \ சத்தமாக சொல்லப்படாத திரைக் கதையில் இசைக்கு, அதற்க்கான அருமையான வாய்ப்பும், கடமையும் இருந்திருக்கிறது தன் கம்பீரத்தை \ கர்ஜனையை மறந்துவிட்ட\ இழந்துவிட்ட ஒரு வயதான சிங்கத்தின் பரிதாபமான குரல் போல இருக்கிறது இசை.
             இப்படத்திற்கு இளையராஜா அவசியம் என மிஸ்கின் நினைத்ததற்க்கான காரணங்கள் உண்மையானது, அனைவரும் அறிந்தது.
              உதாரணமாக தளபதி படத்தின் ஆரம்பக் காட்சியில் குழந்தை ரஜினியை கூட்ஸ் வண்டியில் விட்டுவிட்டு அழும் ஒரு சிறு பெண்ணைக் காட்டிவிட்டு, தொடர்ந்து வரும் டைட்டிலுக்கு அடுத்த காட்சியிலேயே வயதான ஸ்ரீவித்யாவையும், ஜெய்சங்கரையும் ஒரு கூட்டத்தின் நடுவில் காண்பிப்பார் டைரக்டர் மணிரத்னம் . அப்போது தொலைவில் ஒரு கூட்ஸ் வண்டியின் ஹாரன் ஓசை \  இசை கேட்கும். உடனே ஸ்ரீவித்யா கண்கலங்குவார், ஜெய்சங்கர் ஆறுதலாக அவர் தோள்களில் தட்டுவார்.
                1.  கூட்ஸ் வண்டியில் 30  வருடங்களுக்குமுன் குழந்தையை விட்ட அச் சிறுபெண்தான் ஸ்ரீவித்யா,
                 2. ஸ்ரீவித்யாவுக்கு அதற்குப்பின் திருமணம் ஆகிவிட்டது, கணவர் ஜெய்சங்கர்,
                 3. ஸ்ரீவித்யா இன்னும் அக்குழந்தையை நினைத்து தினமும் அழுகிறார், தாய்ப்பாசத்தில் ஏங்குகிறார்,
                  4. திருமணத்துக்குமுன் ஸ்ரீவித்யாவுக்கு நடந்தது, குழந்தை பற்றிய உண்மைகள் அனைத்தும் ஜெய்சங்கருக்கும் தெரியும்,  
                   5. அவருக்கு   ஸ்ரீவித்யா மீது துளிகூட  சந்தேகமில்லை,
                  6.  ஸ்ரீவித்யாவின் உணர்வுகளை முழுமையாக புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர் மீது மிகுந்த அன்பும், பரந்த மனமும் உடையவர் ஜெய்சங்கர்,
                   7. அவர்கள் மிகவும் அன்யோன்யமான தம்பதிகள்.  
  மேற்சொன்ன ஸ்ரீவித்யாவின் 30௦ வருட வாழ்க்கையின் அத்தனை தகவல்களையும், உணர்வுகளையும், வேறொரு டைரக்டர் எனில் 5 அல்லது 6 காட்சிகள் கண்ணீரும், அழுகையும் காண்பித்து குறைந்தது 15 நிமிடங்கள் இழுத்திருப்பர்கள். ஆனால் மணிரத்னம் ஒரேஒரு ஷாட்டில் அதுவும் ஜெய்சங்கர் - ஸ்ரீவித்யா மகன் அரவிந்த்சாமி ஒரு கலெக்டர், நல்லவர், மக்களுக்கும் நல்லது செய்ய நினைப்பவர் என்கிற தகவல்களை சொல்லும் காட்சியிலேயே, போகிறபோக்கில் அழுத்தமாக சொல்லியிருப்பார்.
            அச்சிறுபெண் தான் ஸ்ரீவித்யா என்கிற முக்கியமான தகவலையும், அவரின் அழுத்தமான தாய்ப்பாசத்தையும் விளக்க மணிரத்னம் தனியான வசனங்களையோ, காட்சிகளையோ வைத்திருக்க மாட்டார், ஆனால் இளையராஜா கூட்ஸ் வண்டியின் ஹாரன் சத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அழுத்தமான ஏக்கம் கலந்த சோக உணர்வினைத் தூண்டக் கூடிய இசையை அமைத்திருப்பார், அவ்விசை முப்பதுவருட இடைவெளி தகவல்களை, உணர்வுகளை மணிரத்னம் எதிர்பார்த்ததை விட பலமடங்கு ஆடியன்சுக்கு எழுப்பும். இன்னும் இதுபோல ஏராளமான உதாரணங்களை இளையராஜாவின் இசைக்கு தரலாம்.
            நந்தலாலாவில் இதுபோல டைரக்டர் சொல்ல நினைத்த உணர்வுகளை குறைந்தபட்சம் கூட தூண்டத் தவறியிருக்கிறார் இளையராஜா. இசைக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ள இப்படத்தில், பின்னணி இசையில் செய்த தவறுக்கு வேறு யாராக இருந்தாலும் மன்னிக்க முடியாது, ஆனால் நம் ராஜாவை மன்னிக்கலாம், ஏனெனில் 20௦ வருடங்களுக்கு முன்பே நம் இசைஞானி இசையில் தொட்ட உயரங்கள் அத்தகையது, ஒப்பிடமுடியாதது.

பாடல்கள் 
           அரதப் பழசான மெட்டுகளும் குரல்களும் படத்துடன் ஒட்டவே இல்லை, 20௦ வருட இடைவெளியில் படத்திலிருந்து தள்ளியே இருக்கின்றன.  'ஒண்ணுகொண்ணு தொணையிருக்கும் ஒலகத்தில' பாடலின் வரிகளும், வரும் சூழ்நிலையும் மிகவும் நெகிழ்வுக்குள்ளாக்குகிறது ஆனால் அரதப் பழசான மெட்டும், குரலும் அவ்வுணர்வுகளை மழுங்கடிக்கிறது. மற்ற எந்தப் பாடல்களும் காதுகளுக்குக் கீழோ,  மேலோ செல்லவில்லை.
          
          -நந்தலாலா படத்தின் நிறைகளும், குறைகளும், லாஜிக் ஓட்டைகளும்  விரிவாக அடுத்த பதிவிலும், 
         பிரபல  மாத இதழில் இதழில் வெளிவந்த சாருவின் நந்தலாலா விமர்சனக்காமெடி பற்றிய விமர்சனம் அதற்கடுத்த பதிவிலும் வெளிவரும்.          
     
         இவை அனைத்தும் என் சிற்றறிவுக்கெட்டிய கருத்துக்களே. மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம், ஏற்றுக் கொள்ளும்படி ஏதேனும் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால், அவற்றைத் திருத்தி மீள்பதிப்பும் செய்வேன்.   
           
  
               
        
       

No comments: