Sunday, December 26, 2010

நந்தலாலா விமர்சனமும் சாருவின் தரங்கெட்ட அரசியலும் பகுதி-2a-நந்தலாலா நிறைகள்

நந்தலாலா நிறைகள்
         1. முதல் காட்சியிலேயே நிலையான காமிராவின் வழியே நகரும் பின்புலக் குழந்தைகள் மற்றும் அவர்களைக் கூட்டிச்செல்லும் உறவினர்கள் மற்றும் சிறுவன் அகியின் வழியே ஒரு பார்வை மூலம் அவன் ஏக்கம் மற்றும் தனிமை சொல்லப்பட்டிருப்பது.
       2. சிறந்த எடிட்டிங் மூலம் டிவியை உடைக்கும் பாஸ்கர் மணியின் அறிமுகமே அம்மா மீதான அவனுடைய வெறுப்பை வசனங்களின்றி சொல்கிறது.
      3. சுவரில் கையை உரசிக் கொண்டே நடக்கும் பாஸ்கர் மணியின் உடல் மொழி.  இறுதிக் காட்சிகளில் காண்பிக்கப்படும் அவன் ஊரிலும், வீட்டிலும் இருளான, குறுகிய சந்துகள் நிறைய இருப்பதும், அவன் சிறுவனாக இருந்த பொழுது அதில் நடக்கும் பொது பிடிமானத்துக்காக கைகளை சுவரில் உரசிக்கொண்டே நடந்திருக்கக் கூடும் என்பதாகவும், அது இந்த வயதிலும் தொடர்கிறது என்பதாகவும், இப்போது அதன் அர்த்தம் உடல்ரீதியான பிடிமானத்துக்கு மட்டுமல்லாமல், ஆழ்மனத்தின் உணர்வு ரீதியான பிடிமானமான அன்பு\உறவு\தாய் என்பதற்க்கான ஏக்கமாய்\தேடலாய் படிமப் படுத்தியிருப்பது கவிதை.
      4. எல்லோருடைய இருப்பையும் கால்கள் மூலம் பதிவு செய்ய முயற்சி செய்திருப்பது, அதன் உச்சமாய் ஒரு பெரிய மரத்தின் இருப்பை, அதன் வேர்களை ஒரு பறவையின் கால்கள் போல் காட்யிருப்பத்தின் மூலம் பதிவுசெய்திருப்பது. 
      5. "ஜுரம் நின்னுடுச்சு, இன்னும் ஊசி போட்டுட்டே இருக்கான்", "அங்கபாரு அழுதழுது சிரிச்சிடுச்சு" என்கிற வசனங்களின் மூலம் மனநல காப்பக  வாழ்க்கையின் எதார்த்த வலியினை மெல்லிய கிண்டலுடன் சொல்லியிருப்பது.  
     6. மனநல காப்பகத்தில் ஒரு இறந்த நோயாளியின் உடல் கொண்டு செல்லப்படும் போது பாஸ்கர் மணியின் ரியாக்சனும், பின்னணியில் ஒலிக்கும் அழுகுரல்களும் மரணம் பற்றிய இனம் புரியாத பயத்தை, பீதியை உண்டாக்குகின்றன.
         அதே ரியாக்சனை அகியின் அம்மாவை அன்னவயல் வீட்டில் சந்தித்து அடித்துவிட்டு வெளிவந்து காண்பிப்பதும், இறுதி காட்சியில் அகியிடம் உன் அம்மா செத்துட்டாங்க எனக் கூறுவதும் பிரமாதம்.
     7. பாஸ்கர் மணி தப்பித்து வீதியில் நடக்க ஆரம்பிக்கும் காட்சியில் எங்கோ மணியடிக்கும் சப்தம் கேட்க மனநல விடுதி ஞாபகத்தில் ஒருகணம் அனிச்சையாய் நிற்பது நுணுக்கம்.
     8. உன்மனைவி வேலைக்குப் போய் சம்பாதிக்கிறா என்று சொல்லித் திட்டும் கடைக்கரரின்முன் தலைகுனிந்து நிற்கும் பிக்பாக்கெட்காரன் அகியிடம் மிரட்டிக் காசு பிடுங்குவதும், பட்டென எளிதாய் அறைவதும்  பெரியவர்கள் குழந்தைகளின்மேல் காட்டும் வன்முறைகளை மறைமுகமாக உணர்த்துகிறது.
     9. மூத்திர சந்துக்குள் நடக்கும் சண்டை எதார்த்தமாக இருக்கிறது, அதிலும் பிக்பாக்கெட்காரனாக நடித்திருக்கும் நடிகரின் நடிப்பு அருமை.
     10. "பஸ் எதுல போகுது, மெயின்லயா, பைப்பாஸ்லயா"  எனக் கேட்கும்  பெரியவரிடம் "ரோட்ல" எனவும், இன்னொரு காட்சியில் ஒரு பெண் "சாமி, நீங்க  என்ன சாதி" எனக் கேட்க "மெண்டல்" எனவும் பாஸ்கர் மணி எதார்த்தமாய் கூறும் வசனங்கள் கிண்டலாகவும் அமைவது சபாஷ்.
     11.  பாஸ்கர் மணி "அவன்(அப்பா) நா பொறந்ததுமே ஓடிப் போய்ட்டான் , எதுக்குண்ணே தெரில" "அப்பனுங்கல்லாம் ஓட்டப் பந்தயத்துக்கு போயிட்டாங்களா" எனக் கூறும் வசனங்களும், அதைத் தொடர்ந்து அகி \ பாஸ்கர் மணி இவர்களின் வித்யாசமான பறவை கத்தும் சப்தம் போன்ற சிரிப்பும் அருமை. 
      12. "வேலையா... வேலையெல்லா ஒண்ணுங் கெடையாது..." என்று ஆரம்பித்து பாஸ்கர் மணி விவரிக்கும் மனநல விடுதி வாழ்க்கை பற்றிய வசனங்கள் நறுக். 
      13. கூலிங் கிளாஸ் போட்ட உடனே "ஐயோ ராத்திரி ஆகிடுச்சு" என்று சொல்லி கழட்டி விடுவதும்,  போலீஸ் ரோந்து வாகனத்திடம் லிப்ட் கேட்பதும் நகைச்சுவை.
       14. பாஸ்கர் மணி 3 முறை அறை வாங்கிவிட்டு 4 வது முறை ஸ்கூல் பெண் அறைய கையோங்கும் போது அவள் காலில் எச்சிலைத் தொட்டுவைத்து "இப்பக் குளிருதா" எனக் கேட்பதும், அந்த கபடமற்ற குழந்தை மனதை உடனே அச் சிறுபெண் புரிந்து கொள்வதும், இறுதியில் கூழாங் கற்களை(அது பாஸ்கர் மணி குழந்தைப் பருவத்தில்   பிற குழந்தைகளுடன் மன பிறழ்வால் சேர்ந்து விளையாட இயலாமல் போன தனிமை, ஏக்கம், சக குழந்தைகளின் மேல் இருந்த அச் சிறுவயது அன்பு ஆகியவற்றின் படிமம் என்று எனக்குத் தோன்றுகிறது)  அவளுக்கு பொறுக்கித் தருவதும் நெகிழ்வு.  
     15. காது கேளாத மாட்டு வண்டிப் பெரியவர் தன் வண்டி மாடுகளின் பெயர்களை ராமன்,  இராவணன் என்று கூறுவது, இரண்டு மாடுகளும் வண்டியின் ஓட்டத்துக்கு அவசியம் என்பதன் மூலம் எல்லா உணர்வுகளின் இருமைகளும் சேர்ந்துதான் நம் வாழ்வை நகர்த்துகின்றன என்றும் மனிதன் நல்ல சாரதியாக இருந்து எதிரெதிர் உணர்வுகளை அடக்கி வாழ்வெனும் பயணத்துக்கு புத்திசாலித்தனமாய் பயன்படுத்த வேண்டுமென்றும்  இப்படத்தின் பெரும்பான்மையான கேரக்டர்கள் வழியே சொல்ல நினைத்ததை சிறு வசனத்தில் மறைமுகமாய்ச் சொல்லியிருப்பது excelant .    
      16. கால் ஊனமுற்றவர் (போலியோவால் பாதிக்கப்பட்டு) "எல்லாரும் நொண்டின்னு சொன்னதாலதா மூலைல உட்கார்ந்தேன்" என தாழ்வு மனப்பான்மையால் புழுங்குவதும்,   அந்நிலைமையிலும் ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநீதியைத் தடுக்க போராடுவதும், மருத்துவ முகாமில் கால் வெட்டப் பட்ட நிலையில், சிகிச்சை அளித்துவிட்டுப் போகும் பெண் மருத்துவர் அதே(போலியாவால் பாதிக்கப்பட்ட)  ஊனமுடையவர் என்பதைக் கண்டு தன்னம்பிக்கை அடைவதும், இலவசமாக போலியோ சொட்டு மருந்து தரும் நாடு தழுவிய அரசின் போலியோ ஒழிப்பு முயற்சிக்கு மறைமுக விழிப்புணர்வுப் பிரச்சாரமும் மௌனமாக நுணுக்கமாக கூறப் பட்டிருப்பது சிறப்பு.
       17. காருக்குள்  ஒளிந்து தூங்கும் இருவரையு வெளியே தெரியும் கால்கள் காட்டிக்கொடுக்க மாட்டிக் கொள்ளும் காட்சியில் கால்கள் கவிதை பேசுகின்றன.
      18. "how to keep quiet when there is a mad man behind you ?" என தேனிலவுக் கணவன் மனைவியிடம் சொல்வது ஜென் வார்த்தைகள் போல மனதில் எதையோ தட்டுகிறது.
      19. குடித்துவிட்டு காரோட்டி கலாட்டா பண்ணும் இளைஞனின் தலையில் இரண்டு பீர் பாட்டில்களை உடைப்பது நகைச்சுவை. அவர்கள் கார் எடுத்துக்கொண்டு போகும் அதே கணத்தில், தேனிலவு ஜோடியும் அகியை இறக்கிவிட்டுவிட்டு காரைத் திருப்பிக் கொண்டு ஓடிவிடுவதும் எதார்த்தம்.
       20௦. இளநிக்கடை  பெரியவர், பம்பு செட்டுப் பெரியவர் வரும் காட்சிகளில் நகைச்சுவையே மேலோட்டமாய் தெரிந்தாலும், அவர்களின் உறவுகளால் புறக்கணிக்கப் பட்ட தனிமை, வயதான காலத்திலும் உழைக்க வேண்டிய கட்டாயம், வறுமை, உடல் ஆரோக்கியம், கோபம், அன்பு என அனைத்தும் மௌனமாக அழுத்தமாக காண்பிக்கப் பட்டிருக்கிறது மனதைப் பாரமாக்குகிறது.
        21. திடகாத்திரமான லாரி டிரைவர் பாஸ்கர் மணியை நைய புடைப்பதும், "நீதான ப்பாபாம்ம எடுக்கச் சொன்ன" என்றதும் அவன் உடைவதும் பின்னணியாக வரும் பாடல் வரிகளும் மனதை உருகவைக்கின்றன.
        22. அகி அம்மாவின் குழந்தை நீட்டும் சாப்பிடும் பொருளை குழந்தைத் தனமாக வந்த வேலையை விட்டுவிட்டு வாங்கி பாஸ்கர் மணி அமர்ந்து சாப்பிடுவது எதார்த்தமான காட்சி.
     23.  அகியின் அம்மாவை அறைவது,பணத்தை கீழே போட்டுவிடுவது, வெளியே வந்து பிணத்தை பார்த்த ரியாக்சனைக்  காட்டுவது, கனமான காட்சிகள்.
     24.   முரட்டுத்தனமான, கருப்பான, குண்டான இருவர், அத் தோற்றத்துக்குள் மறைந்திருக்கும் குழந்தைத் தனமான மனது, அத்தோற்றத்தால் சக மனிதர்களால் புறக்கணிக்கப் பட்டு தனிமையில் வாடுவது அனைத்தும் வசனமின்றி உணர்த்தப்பட்டிருப்பது கவிதை.             
     25. வயித்துக்காக விபச்சாரம் செய்யும் தெருவோரப் பெண்ணாக நடித்திருக்கும் ஸ்னிக்தாவின் அறிமுகக் காட்சி எதார்த்தம், அருமை, "நான் என்ன பிச்சைக் காரியா" என காசை விட்டெறிவது அந்நிலையில் வாழ நேர்ந்த பெண்களுக்கும் விட்டுத் தரமுடியாத சில வைராக்கியங்கள் மற்றும் ரோசம் உண்டு என காட்டியிருப்பது டைரக்டரின் பரிவு மற்றும் மனிதாபிமான பார்வை.
     26. கிழவனும், அவன் ஆட்களும் சேர்ந்து அடிக்க, வந்து சேர்ந்த பைக் குண்டர்களிடம் ஓடிப்போய் அவர்களின் தோள்களில் கை போட்டுக் கொண்டு மிருகம் போல் சப்தமெழுப்பிக் கொண்டு அடித்தவர்களைப் பார்த்து துள்ளும் பாஸ்கர் மணியின் உடல் மொழியும், கருத்தும் உலகத் தரம். ஜெயமோகன் மொழியில் சொல்வதென்றால் இப்படத்தின் ஆகச் சிறந்த காட்சி மற்றும் டைரக்சன் என இக்காட்சியை தாராளமாகக் கொண்டாடலாம்.
      27. ஸ்னிக்தா மேலே வெறித்தபடி அக் கேரக்டருக்கு சற்றும் பொருத்தமில்லாத கவிதைத்தனமான சுருக்கமான வசனங்களால் தன் வாழ்வை விவரிக்கும் காட்சியும், "குளி, குளி, குளி அழுக்குப் போயிடுச்சா"  என பாஸ்கர் மணி அவளை இழுத்துப் போய் மழையில் நிறுத்துவதும் சினிமாத்தனமாக இருப்பினும் மனதை சிறிது நெகிழச் செய்வது உண்மை.
      28. அதுவரை லூசான பேன்ட்டை கைகளால் பிடித்தபடியே அலையும் பாஸ்கர் மணிக்கு பெரும் பாலும் தன்னிடம் வரும் ஆண்களின் ஆடைகளைக் கழட்டியே வழக்கமுடைய விபச்சாரப் பெண் முதன் முறையாக ஒரு ஆணின் பேன்ட்டைப் போட்டுவிடுவதன் மூலம் அவர்களுக்கிடையே ஒரு சகோதர பாசம் ஏற்பட்டுள்ளதைப் போல் காட்டுவதும், அதை உறுதிப் படுத்தும் விதமாக சிறுவன் அகி பாஸ்கர் மணியை மாமா எனவும், ஸ்னிக்தாவை அம்மா என அழைப்பதும், ஏற்றுக்கொள்வதும் இரண்டாவது சிறந்த டைரக்சன் காட்சிகள்.
      29. தன் வீட்டுக்குப் போகும் வழியில் கேட்டில் ஏறி தள்ளி விளையாடுவது, இருண்ட குறுகலான சந்துகளைக் காண்பிப்பது, கையை சுவரில் உரசியபடி செல்வது, பேச்சின் இடையில் சுவாதீனமாய்ச் சென்று கூழாங்கற்களை  கரெக்டான இடத்திலிருந்து தேடாமல் எடுத்து வந்து அகிக்கு தருவது, கிணற்றின் இருட்டைப் பார்த்து கத்துவது, ஆகியவை சுருக்கமாக சொல்லாமல் சொல்லப் பட்ட பாஸ்கர் மணியின் பிளாஷ்பாக். இவை சவாலூட்டக்  கூடிய சிறந்த டைரக்சன்.(சிறுவன் பாஸ்கர் மணி, சிறுவயது அம்மா, ஊர், என அரதப் பழசான தனி பிளாஸ்பேக் காட்சிகளைத் தவிர்த்திருப்பது புதுமை, ஆறுதல்                                
     30. சங்கிலியால் கட்டப் பட்டிருக்கும் அம்மாவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைவதும், பின் "எங்கம்மா" என அகியிடம் சொல்லிக்கொண்டே சிறிதும் தயக்கமின்றி(அசூசை பார்க்காமல்) 25 வருட(எத்தனை வருடம் எனபது உறுதியாய்த் தெரியவில்லை) வெருப்பெல்லாங் கரைந்து உடைந்து கட்டிக் கொண்டு அழுவதும் கண்களைக் குளமாக்கும் காட்சிகள். எதுவும் வசனத்தால் சொல்லப்படாமல் காட்சிகளிலேயே சொல்லியிருப்பது சிறந்த டைரக்சன். நடிப்பும் சிறப்பு.
      31. பூட்டைத் திறந்து தாயை கைகளில் ஏந்திக் கொண்டு இருட்டான சந்து வழியே சங்கிலி தரையில் உரச வெளியே போகும் காட்சியில் அது அவன் அம்மாவிற்கான மறுபிறப்பு போலவும் சங்கிலியை தொப்புள் கொடிபோலவும் படிமமாக தோன்றும்படியான காட்சி அமைப்பும், டைரக்சனும் அருமை.
     32. அதைத் தொடர்ந்து தாயைக் குளிப்பாட்டி, உடைகளைத் துவைத்து சுத்தமாக்கி கோவிலுக்கு கூட்டிக் கொண்டு போவது பாசம் மற்றும் மனிதத்தன்மையின் உச்சங்கள்.
      33. பாட்டின் இறுதியில் கைகளை விடுவித்துக் கொண்டு பாஸ்கர் மணி கிளம்ப அவன் அம்மா அந்த அன்பின் \ மகனின் பிரிவை உணர்ந்து பதட்டமாகி மறுபடியும் கைகளை பிடித்துக் கொள்வதும், ஆழ்மனத்தின் பிறழ்வுகளில் உறவுக்கான பிடிமானம் கிடைக்க மறுபடியும் அந்த குறுகலான சந்து வழியே சுவரில் கை உரசாமல் புதிய மனிதனாக  பிறந்து வெளிவருவது போலவும், அதனால் வாசலுக்கு வந்ததும் ஒருகணம் கண் கூச சூரியனைப் பார்த்து தாங்கி நின்று வெளியேறுவதும் மிகவும் நுணுக்கமான காட்சிகள். 
     34. ஆகி பாஸ்கர் மணியை மெண்டல் என கூப்பிடுவது, அழுதபடி தன் நிலை விளக்கம் தந்துகொண்டே ஷூக்களை கரெக்டாக மாற்றிவிடுவது, தன் அம்மாவுடன் இன்னொரு குழந்தையை பார்த்ததும் போட்டோவை காற்றில் விட்டுவிட்டு ஸ்னிக்தாவை தன் அம்மாவாக ஏற்றுக் கொண்டு முத்தமிடுவது அவன் வயதுக்கு யதார்த்தமாக இல்லாமல் சினிமாத்தனமாக இருந்தாலும் நெகிழவைக்கிறது. 
      35. கிளைமாக்ஸ்  காட்சியில் பாஸ்கர் மணி தன் மன அழுத்தங்களில் இருந்தெல்லாம் முற்றிலும் விடுபட்டு மனம் இலேசாகி விடுவதை சிம்பாலிக்காக அவன் எடையற்ற, இலேசான பலூன்களை விற்கும்   வியாபாரியாக அகிவிடுவதன் மூலம் காண்பிப்பது கவிதை. 
      36. படத்தின் இறுதியிலேயே பாஸ்கர் மணியின் பெயர் வெளிப்படுவது, பெரும்பாலான கேரக்டர்களுக்கு படம் நெடுகிலும் பெயரே இல்லாமல் காண்பித்திருப்பது புதுமை.     

-நந்தலாலா படத்தின் லாஜிக் ஓட்டைகளும், குறைகளும் தனி பதிவில் அடுத்து வெளிவரும்.       

2 comments:

கோநா said...

வருகைக்கும், தொடர்தலுக்கும், வாழ்த்துக்கும் நன்றி philosophy prabhakaran .

கோநா said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...
-மன்னிக்கவும் பிரபாகரன், தங்கள் பின்னூட்டம் பதிப்பிக்கப்பட்டு, தவறுதாலாக நீக்கப்பட்டுவிட்டது, மீள்பதிப்பு செய்திருக்கிறேன்.