Saturday, December 18, 2010

ஒரு ஆட்டம் மூன்று கவிதைகள்

1.வியூகம் வகுத்து
நகர்த்துபவர்களின் விழிகளில் 
அமைதிப் புறாக்கள்   
அலகுகளால் குதறிய குருதி 
கருப்பு வெள்ளைக் காய்கள்
கத்திகளை எறிந்து விட்டு
கட்டித் தழுவிக் கொள்கின்றன நகர்ந்து. 
  
2.களத்தில் வெட்டுவதோ
கழுத்தில் வெட்டப்படுவதோ
கதறி அழுவதோ 
கர்வச் சிரிப்போ...
உணர்வுகள் 
சிறு மின்னூட்டங்கள்,
கடவுளால் கைவிடப் பட்டவர்கள்
கைக்கொள்ளும் உபாயங்கள்
கையாலாகாத்தனத்தை   
மறைக்கும் முகமூடிகள்
உங்களை கட்டுப் படுத்தும் 
கரங்கள் நுட்பமானவை
உங்கள் அவதானிப்புகளுக்கு 
அப்பாற்பட்டவை,
ஆதலால்
ஆடற வரைக்கும்
மூடிட்டு ஆடிட்டுப் போங்க.

3.காய்களை நகர்த்தி வெட்டுவதில்லை
இப்போது...
நவீன யுத்தம்
காய்களை கவனித்து 
நம் பக்கம் மாற்றிக் கொள்வது
ஒத்துவராத, உபயோகமில்லாத 
காய்களை மட்டும்
கட்சி மாறிய 
காய்களை வைத்தே கொல்வது
கத்திகளை எப்போதும் 
குழிபறிப்பதற்கு மட்டும் பயன்படுத்துவது 
தவிர்க்க இயலாத சூழலில் மட்டும் 
கொல்லப் பயன்படுத்துவது
குறிப்பாக
முதுகில் குத்துவதற்கே 
முன்னுரிமை கொடுப்பது
காட்டிக் கொடுப்பது
கூட்டிக் கொடுப்பது... 

தப்பான நேரத்துல தப்பான இடத்தில 
தவறிப் பொறந்திட்ட தம்பி...
கஷ்டப் பட்டு போராடு,
உயிரக் கொடுத்துப் போராடு...
எவ்வளவு முடியுமோ 
அவ்வளவு கம்மியான கேவலத்தோட 
செத்துப்போக.


-நன்றி பதிவுகள் மாத இணைய இதழ் 

1 comment:

மதுரை சரவணன் said...

//கத்திகளை எப்போதும்
குழிபறிப்பதற்கு மட்டும் பயன்படுத்துவது
தவிர்க்க இயலாத சூழலில் மட்டும்
கொல்லப் பயன்படுத்துவது//

அருமை. வாழ்த்துக்கள்.