Tuesday, December 28, 2010

நந்தலாலா விமர்சனமும் சாருவின் தரங்கெட்ட அரசியலும் -பகுதி 2b- நந்தலாலா குறைகளும், லாஜிக் ஓட்டைகளும்

நந்தலாலா நெருடல்களும், லாஜிக் ஓட்டைகளும்

       1. சிறுவன் அகி எப்போதும் பாக்கெட்டில் வைத்திருக்கும் அவன் வயதுக்கு மீறிய பணம்.
       2. பெண் வேலைக்காரி வீட்டில் இருக்கையில் சிறுவன் அகிதான் எப்போதும் பாட்டியை பாத்ரூம் அழைத்துப்போவான்  என்பது போல் காட்டியிருப்பது அவ்வளவு யதார்த்தமாய் இல்லை.  
      3. வேலைக்காரப் பெண்ணிடம் காசுகொடுத்து  பாட்டிக்கு தினமும் சொடக்கு எடுத்துவிடுமாறு சிறுவன் அகி சொல்வது  அவன் வயதுக்குண்டான பேச்சோ,சிந்தனையோ கிடையாது.
      4. தன் குழந்தையை காணோம் என அழுதுகொண்டே தேடிவரும் ஒரு பெண்மணியும் அவள் உடன் வருபவர்களும், சிறுவன் அகியிடம் இருக்கும் குழந்தையை கூட்டிக்கொண்டு போகையில் அகியிடம் எதுவும் கேட்காமல், பேசாமல் செல்வது எதார்த்தமாய் இல்லை.
      5. பாஸ்கர் மணி டிவியை ரேடியோ பெட்டி என்று சொல்லும் அளவுக்கு மனம் பிறழ்ந்தவன் போல் பின்வரும் காட்சிகளில் காட்டப் படவில்லை, ஓரளவுக்கு தெளிவானவன் போல்தான் காட்டப்படுகிறான், பின் ஏன் அவ்வாறு சொல்கிறான்? 
    6. பாஸ்கர் மணி எவ்வாறு மனநல விடுதியில் இருந்து தப்பிக்கிறான் என்பது தெளிவாக காட்டப்படவில்லை. 
    7. வீதியில் எதிர்ப்படும் செக்யூரிட்டி, பாஸ்கர் மணி கேட்கும் சாதாரண கேள்விகளுக்கே பதில்சொல்லிவிட்டு, குச்சியை எடுத்து பிச்சைக்காரனையோ, மனநிலை தவறியவனையோ விரட்டுவது போல் விரட்டுகிறார், இத்தனைக்கும் ரொம்பவும் அப்நார்மலாக பாஸ்கர் மணி எதுவும் செய்ய மாட்டார் மேலும் அருகிலுள்ள மனநல விடுதியின் செக்யுரிட்டி உடையைத்தான் அணிந்திருப்பார். 
     8. பாஸ்கர் மணி அம்மா பற்றிய நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்த   டிவியை உடைப்பதிலும், அம்மா அம்மா என அனத்தும் சக நோயாளி ஒருவனின் அறைக்கதவை வெறிகொண்டு கல்லால் தட்டி அவனை அம்மா என்று சொல்வதை நிறுத்தச் செய்வதிலும், அவனின் அம்மா மீதான வெறுப்பு அழுத்தமாக பதிவுசெய்யப்படுகிறது. 
      சிறுவன் அகி பாசமாக அவன் அம்மாவை பார்த்து முத்தமிடப் போவதாகக் கூறியும் அவன் மேல் வெறுப்பு கொள்ளாமல் எதற்கு பாஸ்கர் மணி அவனுடன் ஒன்றாகப் பயணம் செய்கிறான்? இது பாஸ்கர் மணி அகியின் அம்மா பாசத்தை மறைமுகமாக ஏற்றுக்கொள்வது \ ஒப்புக்கொள்வது போல் ஆகும். ஆரம்பத்தில் காட்டப்பட்ட அளவு அம்மா வெறுப்புள்ள ஒருவன் எப்படி எதுவும் நடக்காமல் இப்படி மாறுவான்? நியாயமாய் அவன் அகியை avoid செய்திருக்க வேண்டும். 
     9. பிக்பாக்கெட்காரனுடன் சண்டை போடுகையில் அவன் ஒரு பாட்டிலை உடைத்தவுடன் பாஸ்கர் மணி தரும் ரியாக்சனுக்கும், ஓடுவதற்கும் என்ன அர்த்தம்? பின்வரும் காட்சிகளில் இரண்டு, மூன்று பேருடனும், ஒரு சமயம் அருவாளுடனும் தயக்கமின்றி சண்டை போடுகிறான், வன்முறைக்கு எதிரான அவனது ரியாக்சன் குழப்புகிறது.
     10. "தாய்வாசல் எப்படிப் போறது", என ரோட்டில் செல்லும் ஒருவனை பாஸ்கர் மணி கேட்க, அவன் "இது ஈஸ்ட்டா, வெஸ்ட்டா" என பதிலுக்கு ஆங்கிலத்தில் கேட்க, சாதாரண யூரின் உட்பட எந்த ஆங்கில வார்த்தையும் புரியாத பாஸ்கர் மணி அதைப் புரிந்து கொண்டு "இதே தெரியல, உனக்கு தாய்வாசல் எப்படித் தெரியும்" என பதில் சொல்வது முதல் பெரிய லாஜிக் சொதப்பல். நியாயமாய் அதற்கும் அவன் "அப்டின்னா" என்றே கேட்டிருக்க  வேண்டும்.                    
     11.தன் காசுள்ள பவுடர் டப்பாவை பாஸ்கர் மணியிடம் இருந்து பிடுங்கி வைத்துக்கொள்கிறான் சிறுவன் அகி.அவன் தனியாக அன்னவயல் செல்ல முயற்சி செய்துவிட்டு திரும்பி வந்து அமர்ந்திருக்கையில் பாஸ்கர் மணியும் தனியாக தாய்வாசல் செல்ல பஸ்சில் ஏறி, கண்டக்டரிடம் அகியின் பவுடர்டப்பியை ஆட்டி, ஆட்டி காண்பிக்க, அவனை பஸ்சில் இருந்து இறக்கி விட்டுவிடுகிறார் கண்டக்டர். திரும்பிவந்து அகியிடம் அவன் பவுடர் டப்பியை  திருப்பித் தருகிறான்.முந்தைய காட்சியில் அகி வாங்கிவைத்துக்கொண்ட அவன் பவுடர் டப்பி எப்படி அடுத்த காட்சியில் பாஸ்கர் மணியிடம் மீண்டும் வந்தது?  இரண்டாவது பெரிய லாஜிக் ஒட்டையிது.
    12. சம்பந்தம் இல்லாமல் சிறுவன் அகி நீங்கள் என்ன அன்னவயல்  கூட்டிட்டுப் போங்க, நான் உங்களை தாய் வாசல் கூட்டிட்டுப் போறேன் என பாஸ்கர் மணியிடம் சொல்வதும், அதற்கு அவன் சம்மதிப்பதும் அடுத்த மிகப்பெரிய லாஜிக் ஓட்டை. ஒரு சிறுவனும், ஒரு மனம் பிறழ்ந்தவனும்  இணைந்து செல்வதற்கான அழுத்தமான காரணம் காட்டப்படவில்லை.  
     13. வீதியில் ஒரு காட்சியில் பாஸ்கர் மணியின் கால்களைக் காட்டும்  போது சார்லி சாப்ளின் கால்களைப்போல் வைத்திருப்பார், இடுப்பு உடை லூசாக உள்ள ஒருவன் நேச்சுரலாகவே கால்களை அகட்டிவைக்கவே செய்வான், இது அறிவு சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, அனிச்சையான உடல்மொழி. இது அக்கேரக்டரை மீறி திணித்த லாஜிக் தவறான விஷயம்.  
     14. ஊருக்கு வெளியே ஒரு ஆட்டோ டிரைவர் பாஸ்கர் மணியின் உடையை அடையாளம் கண்டுகொண்டு "நீங்கள் ஹாஸ்பிட்டல்ல வேலை பாக்கறிங்களா" என கேட்பதும் ஆனால் மனநல காப்பகத்துக்கு அருகில் ஒரு செக்யுரிட்டி பெரியவர் அந்த செக்யுரிட்டி உடையை அடையாளம் கண்டுகொள்ளாமல் பிச்சைக்காரன் \ மனநிலை சரியில்லாதவனை போல தடியெடுத்து விரட்டுவதும் நெருடல்கள்.
    15. "அம்மாவைப் பார்த்து ஒரு முத்தம் தர வேண்டும்" என சிறுவன் அகி சொல்வது அவன் வயதுக்குச் சற்றும் பொருத்தமான வசனம் கிடையாது.அம்மாவின் கன்னத்தில் அறைய விரும்பும் ஒருவன் vs அம்மாவின் கன்னத்தில் முத்தமிட விரும்பும் ஒருவன் என்ற டைரக்டர் மிஸ்கினின் ஒன் லைன் ஸ்டோரி அழகுக்காக திணித்த விஷயம்.
     16. ரோந்து போலீஸ் பாஸ்கர் மணியை பார்த்தும், அவன் பேசியதைக் கேட்டும் கூட அவன் மனம் பிறழ்ந்தவன் என்பதைக் கண்டுபிடிக்கத்  தவறிவிடுவது போன்ற காட்சியமைப்பு, முன்வந்த காட்சியில் செக்யுரிட்டி ஒருவர்  பாஸ்கர் மணியை தோற்றத்தை வைத்தேயும்,  பின்வரும் காட்சிகளில் ஸ்கூல் சிறுமியும், லாரி டிரைவரும் பாஸ்கர் மணி சொல்லும் ஒரு வார்த்தையிலேயும் அவன் மனநிலை தவறியன் என்பதைக் கண்டுபிடித்துவிடுவது போன்ற காட்சிகளுடன் ஒத்துப் போகவில்லை. 
     மேலும் அவர்களை போலீஸ் அப்படியே விட்டுவிட்டுப் போவதும் இயல்பாக இல்லை.தமிழ்நாட்டுப் போலீஸ் எல்லாப் படங்களிலும் ஒரேமாதிரிதான் இருக்கிறார்கள் முட்டாள்களாக, கடமை தவறுபவர்களாக, பாவம்.
  17. டிரெக்டர் எடுத்துக்கொண்டு லிப்ட் தருமளவு சுதந்திரமும், வசதியும் உள்ள அந்த மனம் நெகிழ்ந்த சிறு ஸ்கூல் பெண் பஸ்சுக்கான பணத்தை அகியிடம் கொடுத்திருக்கலாம், ஆனால் கதை ரோட்டில் நடந்துதான் செல்லவேண்டுமென டைரக்டர் மிஸ்கின் வற்புறுத்தி சொல்லிவிட்டதால் அவ்வாறு செய்யாமல் பாட்டுப் பாடி, உப்பு மூட்டை விளையாண்டுவிட்டு அழுதுகொண்டே நடந்தே போகட்டும் என விட்டுவிட்டுப் போய்விடுகிறாள்.
    18. மேலும் அப்பெண் விடைபெற்றுப் போகையில் "ரத்தம் வந்தா எச்சி தொட்டு வை" என பாஸ்கர் மணி repeat பண்ணுவது, அக் கேரக்டரின் இயல்பை மீறி, ஆடியன்சை நெகிழவைக்க டைரக்டர் மிஸ்கினாக யோசித்ததும், அதற்கு அப் பெண் ஓடிவந்து அவன் நெஞ்சில் குத்திவிட்டு ஓடுவதும் அந்த வயதுக்குப் பொருத்தமில்லாத அரதப் பழசான கீறல் விழுந்த black & white காத்து சினிமாத்தனம், திடீரென மிஸ்கின் பேரரசுவாகி எரிச்சலூட்டுகிறார்.
   19. பாஸ்கர் மணி குடித்துவிட்டு காரோட்டும் இளைஞனின் தலையில்   பீர் பாட்டிலை இருமுறை சாதாரணமாக உடைக்கிறார்,  ஆனால் அது பிக்பாக்கெட்காரன் ஒரு பாட்டிலை  உடைக்கும் போது முன்னர் தந்த பயந்த ரியாக்சனுடன் முரண்படுகிறது. 
    20. பம்பு செட்டுப் பெரியவரை தண்ணிக்குள் பாஸ்கர் மணி முக்கி முக்கி எடுப்பதை நகைச்சுவையாக காட்டினாலும், அவரின் பரிதாபமான உடலுக்கும், வயதுக்கும், எழுப்பும் குரலுக்கும், அவசியமில்லாத பெரிய வன்முறையது.  
    21. அடையாளத்தை மறைப்பதற்காக id caradai எடுத்து உள்ளே வைப்பதும், சர்ட் இன்னை எடுத்துவிடும் ok,  அகி தன் school bag இல் 3 செட் கலர் உடைகள் இருந்தும் ஏன் யூநிபார்ம்மை மாற்றிக்கொள்வதில்லை? மேலும் குழந்தைகள் சீருடைகளை விட கலர் டிரஸ் போட்டுக்கொள்ளவே அதிகம் விரும்புவார்கள்.
       பம்பு செட்டில் குளித்தபின்பும் உடை மாற்றாமல் ஈரமான உடைகளையே போட்டுக்கொண்டு படம் முழுவதும் நடக்கிறான் அகி டைரக்டர் மிஸ்கினுக்காக.{படம் முழுவதும் ஒரே உடை என்பது தற்போதைய தமிழ் சினிமாவில் சிறந்த டைரக்சனுக்கான ஒரு அடையாளம்}  
    22. சிறுவன் அகி வாட்டர்கேனை வாயில் கவிழ்த்து அதில் நீரில்லை என ஆடியன்சுக்கு காண்பித்த மறு நொடியே ஆளரவமற்ற ரோட்டில் ஒரு இளநிக்கடை இருப்பது யதார்த்தமில்லை, அக்மார்க் சினிமாத்தனம்.
    23. பாஸ்கர் மணி அழகாக இளநி வெட்டி பெரியவருக்கு கொடுக்கிறான், அது எப்படி மனநல காப்பகத்தில் இருந்த அவனுக்குத் தெரியும்? இளநி வெட்டுவது கொஞ்சம் practice தேவைப்படுகிற ஒரு செயல் மிஸ்கின்.
    24. வியாபாரியான இளநி கடைக்காரர் கையில் எப்படியும் பணம் இருந்திருக்கும்,  அகியிடம் பஸ்சுக்கு பணம் கொடுத்திருக்கலாம், வாங்க மறுத்திருந்தால் வரும் பஸ்சை நிறுத்தி ஏற்றி, டிக்கெட் வாங்கி கொடுத்திருக்கலாம், இல்லை இளநிகுடிக்க நிறுத்தும் ஏதேனும் ஒரு வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏற்றி விட்டு இருக்கலாம் எதுவும் செய்யாமல் சிறுவனையும் சேர்த்து வேகாத வெயிலில் இளநி மட்டும் வாட்டர் கேனில் ஊத்திகொடுத்துவிட்டு நடக்க விட்டுவிடுகிறார் மிஸ்கின் ஸ்க்ரிப்டைச் சொல்லிவிட்டதால்.
     25. கால் ஊனமுற்றவர் சண்டையில் தன் கால் வெட்டப் பட்டதற்கான ரியாக்சனை,{ஐயோ எங்காலு அயோ எங்காலு என்று கத்துவது} வெட்டப் படும் சில நொடிகளுக்கு முன்பிருந்தே காட்டுகிறார், டப்பிங் மிஸ்டேக்    என்று நினைக்கிறேன்.
    26. பாஸ்கர் மணியும் அகியும்   இரு மெழுகுவர்த்தி விளக்குகளை நடு ரோட்டில் வைத்து லாரியொன்றை  நிறுத்துவது o.k , ஆனால் அமானுஷ்யமாக ஊளையிட்டு அந்த டிரைவர்களை  பயமுறுத்துவது சிறுவனின் வயதுக்கும், பாஸ்கர் மணியின் மனநிலைக்கும் இயல்பாக தோன்றாத ஒன்று,  மேலும் விளக்கை எடுத்து ஓரமாய் வைக்கும் இடைவெளியில் லாரியில் ஏறுவதற்கு அவ்வாறு செய்ய வேண்டிய   அவசியமும் இல்லை. மிஸ்கின் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
    27. காருக்குள் தூங்கிய  பாஸ்கர் மணியின் உயரத்துக்கு வேண்டுமானால் உறக்கத்தில் வசதிக்காக கால்களை காரின் ஜன்னலில் நீட்டுவது நடக்கக் கூடிய ஒன்றாக இருக்கலாம், ஆனால் சிறுவன் அகியின் உயரத்துக்கு அவ்வாறு ஜன்னலுக்கு வெளியே கால்களை நீட்டுவது என்பது காமிரா \ காட்சியின் அழகுக்காகவும், நகைச்சுவைக்காகவும் அவன் விழித்திருந்து மிகவும் சிரமப்பட்டுச்  செய்த ஒன்றாகத்தான் இருக்கும்.
   28. தாய்வாசல் ஊருக்குள் செல்கையில் சிறுவன் அகி தான் முத்தமிடப் போகும் தன் அம்மாவின் போட்டோவைக் காட்டுகையில், அம்மா என்று சொன்னாலே வெறிகொள்ளும் பாஸ்கர் மணி " உங்கம்மா அழகாக இருக்காங்க" என்று சொல்வதும்,  "நானும் ஒரு முத்தங் கொடுக்கட்டா" என்று கேட்பதும் ஏற்றுக் கொள்வதாய் இல்லை.  
    29. அகியின் அம்மா தன் வீட்டு வாசலில் அமர்ந்து தன் குழந்தையின் கையில் உள்ள பொருளை வாங்கிச் சாப்பிடும் பாஸ்கர் மணியை பார்த்ததும் அவன் மனநிலை சரியில்லாதவன் என்பதைக் கண்டுகொள்கிறாளா?   
        கண்டுகொண்டதைப் போலத்தான் தயக்கமின்றி அவன் கைகளைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துப் போகிறாள், அவனை யார்{begger ,  relative, blakmailer , பாட்டி அனுப்பிய ஆள்,ரோட்டில் பார்த்து பழகிய மனம் பிறழ்ந்தவன்}என்று நினைத்து எதற்கு { அவள் புது கணவன் வருவதற்குள் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு, அகியை திரும்பவும் பாட்டி வீட்டில் சென்று விட்டுவிடுவதற்கு, பாஸ்கர் மணி அகியிடம் உண்மையை சொல்லிவிடாமல் இருப்பதற்கு}  அவனிடம் பணம், நகைகளைத் தருகிறாள்? அகியும் அவனுடன் அவளைப் பார்க்க வந்திருப்பது தெரியுமா, தெரியும் எனில் ஒரு மனம் பிறழ்ந்த தெரியாத மனிதனுடன் தன் குழந்தை போகிறான் என்பதை எப்படி பதட்டப் படாமல், பயப்படாமல் நம்பி அனுமதிக்கிறாள்? என்பன போன்ற மனதில் எழும் கேள்விகள் குழப்புகின்றன.
     30. அகியின் அம்மாவை அந்த தெருவில் போட்டோ பார்த்தும் ஒருவருக்கும் தெரியவில்லை, இருவருமே வீட்டு எண்ணைக் கூட ஒவ்வொரு வீடாக ஏறியேறி கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வீடாக ஓடும் காட்சி அழகுக்காகவும், எந்த வீடு என்ற ஆடியன்சின் சஸ்பென்சுக்காகவும் யதார்த்தம் மீறப் பட்டிருக்கிறது.
    31. இது ஜப்பானிய படத்தின் பாதிப்பு என்பதைத் தாண்டி உல்டா என்பதை உறுதிப் படுத்துவதுபோல் உள்ளது நம்ம ஊருக்கு சம்பந்தம் இல்லாத தோற்றமும், உடல்மொழியும் உள்ள அந்த மொட்டைத் தலை குண்டர்களும், அந்த பைக்கும், sorry மிஸ்கின் ஜப்பானிய சுமோ வீரர்கள் போலத்தான் உள்ளனர் இருவரும். 
   32. ஸ்னிக்தா அறிமுக காட்சியில் பாஸ்கர் மணி, சிறுவன் அகி இருவரும் தன்னுடன் பேசிவிட்டு பத்தடி தூரம் சென்ற உடனேயே பொத்தென்று ஒரு நாள் பசியில் மயங்கி விழுவது பழைய சினிமாத்தனம் மிஸ்கின்.
    33.  மழைக்கு ஒதுங்கிய இடத்தில் ஸ்னிக்தா மேலே வெறித்தபடி அவள் வாழ்க்கையை சுருக்கமான வரிகளில் கவிதைபோல சொல்வது கேரேக்டருக்கு சற்றும் பொருந்தாமல் மிஸ்கினின் மேதமைத் தனத்தைக் காட்டி எரிச்சலைத் தருகிறது.
     அதுவும் அப்பெண்ணின் அப்போதுள்ள குரலின் பாவம்{ பாவனை} இன்னும் எரிச்சலூட்டுகிறது.
    34.  தாய்வாசல் ஊருக்கு வெளியே ஸ்னிக்தா பீர் குடித்த இளைஞர்களிடம் அவர்களை மிரட்ட சிறுவன் அகியை அருகில் வைத்துக் கொண்டு செய்யும் செயல், அதிகம் சிரிப்பை விட அருவெறுப்பைத் தருகிறது.
     35. அடுத்த காட்சியில் ஊருக்குள், அம்மாவுக்கு அருகில் வந்துவிட்ட பதட்டம், வெறி ஏதுமின்றி பாஸ்கர் மணி ஜாலியாக, வருகிறார், ஸ்னிக்தாவிடம் ஓடிச் சென்று "நாமெல்லாம் ஒண்ணா இருக்கலாமா" என்று குதூகலத்துடன் கேட்கிறார்.  அகிதான் "எங்கம்மா எங்க, எங்க" என நச்சி கதையின் ஓட்டத்துக்கு பாஸ்கர் மணியை கொண்டு வருகிறான்.
    36.  தாய்வாசலின், காட்டப்படும் அத்தனை தெருக்களிலுமே ஒருவர் கூட இல்லை, ஏன்?
    37. நரிப் பல் விற்பவரின் வசன உச்சரிப்பு  எரிச்சலைத்தருகிறது.
              சிறுவன் அகி மெண்டல் என பாஸ்கர் மணியை அழைத்து அவனை உடைப்பது, வேறொரு குழந்தையுடன் தன் அம்மாவை பார்த்ததும், போட்டோவைக் காற்றில் விடுவது, ஸ்னிக்தாவை உடனே அம்மாவாக ஏற்றுக்கொண்டு  முத்தமிடுவது, பெரியவர்களுக்கே வரமுடியாத தெளிவு, வைராக்கியம்.  அகியின் வயதுக்குண்டான அறிவோ, செயலோ கிடையாது.
    38.  மனநல காப்பகத்தின் மேல் வெறுப்புடைய பாஸ்கர் மணி, தெளிந்த மனநிலையில் இறுதியில் தன் தாயை மனநல காப்பகத்திலேயே சேர்த்துவிடுவது உறுத்துகிறது.    

2 comments:

Anonymous said...

i was also wondering about these. You missed the tractor girl saying that her father refused to give money. There was also the handicapped doctor administering the handicapped person, the whole handicapped episode was not required.

The biggest mistake was Basker admitting his Mother to a mental hospital.

கோநா said...

thanks for ur comment anonymous.