Saturday, May 14, 2011

நிலவு சாட்சியாய்...


கடவுள் செதுக்கிவிட்ட
கூரிய நகங்களை
முதுகில் பதித்து வீழ்த்தி
கழுத்தைக் கவ்விய 
புலியின் கண்களில் ஒளிர்கிறது
விண் வெறித்த மான் விழி நிலவு.

மிளா அருந்திக்கொண்டிருந்த
நெளிந்த நிலாவுக்குள்ளிருந்து
வெளிவந்த முதலையதை
இழுத்துச் சென்று மறைந்தது
மீண்டும் நிலவுக்குள்.

ஒவ்வொரு மாத்திரையாய்
சர்க்கரை தடவி விழுங்கிய பெண் 
மெல்ல மெல்ல செத்துப்போன 
இரண்டுமணி நேரமும் 
பண்பலையில் ஒளிபரப்பான
நிலவுப் பாடல்கள்
அறையை நிறைத்து 
அவள் விழிகளில் வெறித்திருந்தது 

பக்கத்து ராணுவன் 
சுட்டதில் இறந்தஎம்
விசைப்படகு மீனவனின்
விரிந்த விழிகளில்
இறுதியாய் தெரிந்தது
மோன முழு நிலவே.

நிலவைப் பற்றிய 
பாடத்தின் நடுவே
குறிவைத்து
பள்ளிக் கூரை பிரித்து விழுந்த 
ஷெல்களில் சிதறிய
குழந்தைகளின் முகத்திலெல்லாம்
ரத்தத்துடன் 
நிலாச் சிதறல்களும்.

கடவுளைக் கொன்றுவிட்டு 
சூரியனில் விழுந்து 
தற்கொலை செய்துகொண்டதாக வந்த
நிலவைப் பற்றிய 
அதிகாலைச் செய்தி 
அதிர்ச்சியோ ஆச்சர்யமோ தரவில்லை
இன்னும் கொஞ்சம் 
இனிப்பாக இருந்தால் நன்றாயிருக்குமென 
தேநீருக்குச் சர்க்கரை தேடுகிறேன்.

1 comment:

சிவகுமாரன் said...

இறுதி வரிகள் செவிட்டில் அறைந்தது போல் இருந்தன.