மதிய வெய்யிலில்
மடை மாற்றச் சென்றுவிட்டு திரும்புகையில்
சட்டெனக் கருத்து நனைக்கிறது இடியும் மின்னலும்
சித்தப்பா திருமணத்தில் சண்டையாகி
பேச்சுவார்த்தை நின்றுவிட்ட
மாமாவின் வீட்டருகே தயங்கியபடி
மழையில் நனைந்து ஒதுங்க
மிரண்டு குரைக்கிறது புதிய அல்சேசன் நாய்க்குட்டி
வெளிவந்த முறைப்பெண் முத்தழகு
உள்ளோடி குடையுடன் வந்து
வாங்க மாமாவென கூட்டிப் போகிறாள்
வற்புறுத்தி வீட்டுக்குள்
என்ன மாப்ளே வேத்தாள் மாதிரி வெளியவே நின்னுட்டீங்க
எளவு இந்த வானம் மாதிரிதானே மனசும்
மழையும் கோபமும் சட்டுன்னு வந்துட்டாலும் கஷ்டம்
வராமயே இருந்தாலுங் கஷ்டம்
சொல்லியபடியே எனக்குப் பிடித்த கறுப்புக் காப்பி போட்டு
சொம்பில் நீட்டுகிறாள் அத்தை
கொஞ்ச நேரம் மழையில நின்னா
உங்க தலைகுள்ள இருக்கிறது கரைஞ்சிடும் மாப்ளே எனக்
கேலியுடன் தத்துவமும் உதிர்த்துச் சிரிக்கிறார் மாமா
உதடு கடித்துச் சிரிப்பை அடக்கியபடி
ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டிருக்கிறாள் முத்தழகு
உறவுகளின் கதகதப்பில் குளிர் காய்கிறது உடலும் மனமும்
உள்ளும் புறமும் சூழ்ந்திருந்த கருக்கல்
வெளுக்கிறது மெல்லமெல்ல.
4 comments:
நெகிழ்வான கவிதை...உணர்வும் வார்த்தைகளும் பின்னி பிணைந்து , ஊறற்ற ஓட்டத்துடன் அமைந்திருக்கிறது...வாழ்த்துக்கள் கோநா...
எளவு இந்த வானம் மாதிரிதானே மனசும்
மழையும் கோபமும் சட்டுன்னு வந்துட்டாலும் கஷ்டம்
வராமயே இருந்தாலுங் கஷ்டம்\\
பொருள் பொதிந்த வரிகள்.....
வாழ்த்துக்கள் கோநா
நெகிழ்வான கவிதை. வாழ்த்துக்கள்.
@ராஜா
@துரோணா
@லக்ஷ்மி
-அனைவருக்கும் மிக்க நன்றி.
Post a Comment