வெண் சுவரில்,
புகைப்படத்தில்,
புன்னகைக்க முயன்ற
பிதாயிதழ்களில்
பிடித்துத் தொங்குகிறது
ஒட்டடை மாலை.
குறிவிடைக்கத் துரத்தி
கடித்துக் குதறிய
மென் கழுத்தின்
குருதி வாடையோ...
ஐந்து பேர்
குழு வன்புணர்ந்த பின்
பூப்பெய்தி வந்த
முதல் விலக்கு நனைத்த
பத்து வயது
பாஞ்சாலி உள்ளாடை வீச்சமோ...
கடைசி ராணுவனின்
கடைசித்துளி சிதறிவிழ
பெருமூச்சோடு எழுந்து வந்த
பதினான்கின்
உப்புக் கண்ணீர்க் கல் கரிக்கும்
பவுடர் வாசனையோ...
மொய்த்த ஈக்களை விரட்டி
முதல்த்துளி சீளில் விழுந்து
கலந்து எழுந்த மழை வாசமோ...
உண்டு புணர்ந்தபின்
மூச்சிரைக்க முலைகளில்
முத்தமிட்டுக் கொண்டிருந்த பின்னிரவில்
ஷெல்லடித்துச் சிதறிய
குருதி அமிலங்கலந்த
எச்சில் வாசமோ...
எட்டி உதைக்கச் சிதைந்து
குருதியோடு ஒழுகிய
தாய் மணம் வீசுங்கருவில்
ராணுவ(ன்) போதையில்
எடுத்த வாந்தியில் வீசும்
சாராய வாடையோ...
வழியற்று நீளும்
பெருவெளிப் போராட்டப் பாலையில்
வரியோடிய குருமணலின்
முடிவற்றாதுதிர தாகத்தில்
நினைவிழந்து முடமான
கருடன் குதறி குருடானவனின்
எறும்புகளை எச்சிலொழுக்கி இழுக்கும்
கண் பச்சை வாடையோ...
மோன புன்னகைக்கும்
புத்தனின் பாதகமலங்களில்
சிங்க வேட்டை நாயின்
விந்து நாத்தமும்
கந்தக நெடியும்
கலந்து சிதறிய
தமிழ் யோனியின்
கருகும் புகைவாசமோ...
எலிப்பொந்து முகாம்களில்
சுற்றிலும் மழம் சூழ
பாடம் நடக்க
பள்ளி தகர்த்து
தரைமட்டமாக்கி
வெடித்துச் சிதறி,
எரித்து,
கொன்று,
புதைத்து
வெற்றியென்றபின் தந்த
பொட்டலச் சோற்றில் வீசும்
பீதியில் பேண்டயெம்
பிள்ளைகளின் மலஜல வாசமோ...
கலந்து வந்த காற்றால்
மெலிதாய் ஒட்டடை அசைய
புகைப்பட பிதாயிதழ்கள்
போதை அகிம்சையில்
புன்னகைக்கிறதோ...
பழுப்புச் சுவரைப்
பற்றிப் புணர்ந்த
ஒற்றைப் பல்லியின்
குறுங்குறி
உச்சத்தில் துப்பிய
செந்நிற விந்து
பிதா விழிகளில்
விழுந்து வழிவது
கண்ணீரோ ...
அழுகிறதோ,
புகைப்படத்தில்
புன்னகைக்க முயன்ற
பிதாயிதழ்கள். .
No comments:
Post a Comment