Tuesday, November 30, 2010

புகைப்படத்தில், புன்னகைக்க முயன்ற பிதா, காந்தியிதழ்களில் பிடித்துத் தொங்குகிறது ஒட்டடை மாலை.

பழுப்பு வன்புணர்ந்த 
வெண் சுவரில், 
புகைப்படத்தில்,
புன்னகைக்க முயன்ற 
பிதாயிதழ்களில்
பிடித்துத் தொங்குகிறது 
ஒட்டடை மாலை.
குறிவிடைக்கத் துரத்தி
கடித்துக் குதறிய
மென் கழுத்தின்
குருதி வாடையோ...

ஐந்து பேர் 
குழு வன்புணர்ந்த பின்
பூப்பெய்தி வந்த
முதல் விலக்கு நனைத்த
பத்து வயது
பாஞ்சாலி உள்ளாடை வீச்சமோ...

கடைசி ராணுவனின்
கடைசித்துளி சிதறிவிழ
பெருமூச்சோடு எழுந்து வந்த
பதினான்கின் 
உப்புக் கண்ணீர்க்   கல் கரிக்கும் 
பவுடர் வாசனையோ...

மொய்த்த ஈக்களை விரட்டி 
முதல்த்துளி சீளில் விழுந்து
கலந்து எழுந்த மழை  வாசமோ...

உண்டு புணர்ந்தபின்
மூச்சிரைக்க முலைகளில் 
முத்தமிட்டுக் கொண்டிருந்த பின்னிரவில் 
ஷெல்லடித்துச் சிதறிய
குருதி அமிலங்கலந்த
எச்சில் வாசமோ...

எட்டி உதைக்கச் சிதைந்து 
குருதியோடு ஒழுகிய 
தாய் மணம் வீசுங்கருவில் 
ராணுவ(ன்)  போதையில் 
எடுத்த வாந்தியில் வீசும்
சாராய வாடையோ... 

வழியற்று நீளும் 
பெருவெளிப் போராட்டப்   பாலையில் 
வரியோடிய குருமணலின்
முடிவற்றாதுதிர தாகத்தில் 
நினைவிழந்து முடமான
கருடன் குதறி குருடானவனின்
எறும்புகளை எச்சிலொழுக்கி இழுக்கும் 
கண் பச்சை வாடையோ... 

மோன புன்னகைக்கும் 
புத்தனின் பாதகமலங்களில் 
சிங்க வேட்டை நாயின் 
விந்து நாத்தமும் 
கந்தக நெடியும் 
கலந்து சிதறிய 
தமிழ் யோனியின்
கருகும் புகைவாசமோ...

எலிப்பொந்து முகாம்களில் 
சுற்றிலும் மழம் சூழ 
பாடம் நடக்க
பள்ளி தகர்த்து
தரைமட்டமாக்கி 
வெடித்துச் சிதறி,
எரித்து,
கொன்று, 
புதைத்து
வெற்றியென்றபின் தந்த
பொட்டலச் சோற்றில் வீசும்
பீதியில் பேண்டயெம்
பிள்ளைகளின் மலஜல வாசமோ...

கலந்து வந்த காற்றால் 
மெலிதாய் ஒட்டடை அசைய 
புகைப்பட பிதாயிதழ்கள்
போதை அகிம்சையில் 
புன்னகைக்கிறதோ...

பழுப்புச் சுவரைப் 
பற்றிப் புணர்ந்த
ஒற்றைப் பல்லியின்
குறுங்குறி
உச்சத்தில் துப்பிய 
செந்நிற விந்து 
பிதா விழிகளில் 
விழுந்து வழிவது 
கண்ணீரோ ...
அழுகிறதோ, 
புகைப்படத்தில் 
புன்னகைக்க முயன்ற 
பிதாயிதழ்கள்.  .    
          
  
        
          

        

Sunday, November 21, 2010

சற்றுமுன் பெய்தமழை.

தெருவெங்கும் குழிகளை 
தெளிந்த வானத்தையும் 
கொஞ்சம் மேகத்தையும் 
நிரப்பி
சாலையை சீர்செய்துள்ளது 
சற்றுமுன் பெய்தமழை.
 பாதசாரிகள் 
வாகன ஓட்டிகள் 
பார்த்துச் செல்லுங்கள் 
பறந்து கடந்திடும்
பறவைகளை மிதித்துவிடாமல் 
விமானங்களில் மோதிவிடாமல் 
தவிர...
நீங்கள் 
தவறிவிழுந்துவிடவும் கூடும் 
தரையில்லா 
பிரபஞ்சப்பெருவெளிக்குள்
பூமியைச் சுற்ற
இன்னொரு நிலவாய்.
   
          

சிநேகமாதல்

முன்னிருக்கையில் பெண்
புட்டாய்
அழகாயிருந்தாள்
அம்மாவுடன்
அமர்ந்திருந்தவள்
எதேச்சையாய்
என்னைப்பார்க்க
முழிபிதுக்கி
மூக்குவிடைத்து
நாக்குதுருத்தி
கைவிரல்களை
கொம்புகளாக்கி
அழகு காண்பிக்க
உடனே சிரித்தாள்.

சிநேகமாகிவிட்ட
சந்தோசத்தில்
இயல்பாகி
இலேசாய்   சிரிக்க
உடனே அழுதவள்
திரும்பிக்கொண்டாள்.

அவள் அம்மாவிடம்
என்னவச்சு
காமெடி   கீமெடி
பண்ணிட்டாளோயென்று
இன்றுவரை
உறுதியாய்தெரியவில்லை. 


-நன்றி பதிவுகள் மாத இணைய இதழ் 
 

Sunday, November 7, 2010

எ(அ)து

உருவான(அ)து 
சேர்ந்த(அ)து
வளர்ந்த(அ)து 
மகிழ்ந்த(அ)து
இருந்த(அ)து  
அறிந்த(அ)து
பெருகிய(அ)து 
ம௫கிய(அ)து
உ௫கிய(அ)து
பிரிந்த(அ)து
கரைந்த(அ)து
குறைந்த(அ)து 
மறைந்த(அ)து
அருவான(அ)து
பொதுவான(அ)து.

-நன்றி திண்ணை இணைய இதழ்