Sunday, February 13, 2011

சில காதல் கவிதைகள்


1.பெரும் மழை   

விழிகளின் ஜன்னல்களில் 
தயங்கிப் பார்க்கிறது  
இதழ்களின் துடிப்புகளில்
தவித்து ஊமையாகிறது 
விரல்களின் நடுக்கங்களில்
ஒளிந்து மறைகிறது 
கால்களின் தயக்கங்களில் 
தேங்கி நிற்கிறது
ஒரு உதறு உதறிவிட்டுத்தான் போயேன் 
பெரும் காதல் மழையை 
நனைந்த சிட்டுக்குருவியென என்மேல்.

2.காதலென்று 

மௌனத்தின் உதடுகளால் பேசுகிறேன்
வெட்கத்தின் காதுகளால் கேட்கிறாய்
நான் சொல்லத் தயங்கியதும்
நீ கேட்கத் தவித்ததும்
இச் சிறப்பிதழில் அச்சேறுகிறது
ஆதி மொழியில் காதலென்று. 

3.ஆதிக்கனி 

கவனிக்காமல் விட்டுவிடுவார்களோயென்ற கவலையில்
கடிக்காதேயென்று கைகாட்டிய கடவுளின் கருணையால் 
ஆதிப்பெண் கடித்த பாதிக்கனி 
இன்னும் இனிக்கிறது உன் இதழ்களில். 

4.ஆறுதலற்றவன் சொல்லும் ஆறுதல்

கல்லூரிப் பேருந்துக்காக காலையில் காத்திருக்கையில்
நீ பேசிச் சிரிக்கும் கொன்றை மரம்
பூக்களுடன் இலைகளையும் உதிர்த்துவிட்டு... 

எப்பொழுதும் நீ 
மடியில் அமர்ந்து தோளில் சாய்ந்து கொள்ளும் 
ஜன்னலோர முதல் இருக்கை
தாங்கமுடியாத பாரத்துடன் வெறுமையாய்...

இறங்கியதும் நீ தலைகுனிந்து ஒருகணம்
தினம் வணங்கும் மரத்தடிப் பிள்ளையார்
தெருவையே  வெறித்தபடி...

செமெஸ்டர் லீவ் முடிந்து சீக்கிரம் வந்துவிடுவாயென
எல்லோருக்கும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறேன் 
இதுவரை நீ ஒருபொருட்டாய் மதித்திடாத நான்.

5.அம்மாவுக்கு எல்லாந் தெரியும்

எல்லோரையும் பார்க்க ஆசைப்பட்டு
நோட்டுவேனுமென்று நீ வீட்டுக்கு வந்துபோன இரவு
நல்ல லட்சணமான பொண்ணுதாண்டா       
மொதல்ல ஒழுங்கா படிச்சு ஒரு வேலைய தேடிக்க கண்ணு
உன்விருப்பத்துக்கு யாரும் குறுக்க நிக்கமாட்டோமென்றஅம்மாவிடம் அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா என்றதுக்கு சும்மார்றா மொசப்புடிக்கிற  நாய மூஞ்சியப்பாத்தா தெரியாதா என்றாள்
உன்முகமா என்முகமா யார்மூஞ்சி காட்டிக் கொடுத்ததென்று 
நானும் கேட்கவில்லை அம்மாவும் சொல்லவில்லை.

6.சிறகு நனைந்த தேவதை சொன்னது 

ஓரப்பார்வையில் மின்னல் மின்ன 
இதயக் கூட்டுக்குள் இடி இடிக்க 
நீ மழையாய் வந்தாய்

கண்களில் கானல் காய 
நெஞ்சுக்குள் தாகம் பாய 
நான் வெயிலாய் வந்தேன்

நாம் சந்திப்பில் பிரிந்த ஒளியின் வண்ணங்களை 
எல்லோரும் வானவில் என்க
இல்லையிது காதலென்று காதோடு சொல்லிப் பறக்கிறது
சிறகுகள் நனைந்த தேவதையொன்று.
 

6 comments:

Raja said...

//ஒரு உதறு உதறிவிட்டுத்தான் போயேன்
பெரும் காதல் மழையை
நனைந்த சிட்டுக்குருவியென என்மேல்//

//ஆதி மொழியில் காதலென்று//

//உன்முகமா என்முகமா யார்மூஞ்சி காட்டிக் கொடுத்ததென்று
நானும் கேட்கவில்லை அம்மாவும் சொல்லவில்லை//

//இல்லையிது காதலென்று காதோடு சொல்லிப் பறக்கிறது
சிறகுகள் நனைந்த தேவதையொன்று//

என் வயதில், பத்தாண்டுகளைக் குறைத்துவிட்டன இவ்வரிகள்... வாழ்த்துக்கள் கோநா...

ம.தி.சுதா said...

அருமையான வரிகள் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

ஹேமா said...

அம்மாவுக்கு எல்லாம் தெரியும்.
அருமை அருமை.காதல் வரிகள் நிறையவே மனதிற்கு இதமாய் !

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

அருமையான கவிதைகள்...

அதிலும்..

//உன்முகமா என்முகமா யார்மூஞ்சி காட்டிக் கொடுத்ததென்று
நானும் கேட்கவில்லை அம்மாவும் சொல்லவில்லை.
//

ஹ்ம்ம்.. என்ன அழகான வரிகள்...! :)

//எல்லோருக்கும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
இதுவரை நீ ஒருபொருட்டாய் மதித்திடாத நான்//

... உண்மையில் உணர்வு பொங்கும் வரிகள்.. ரொம்ப நல்ல இருக்குங்க

வாழ்த்துக்கள் :)

Philosophy Prabhakaran said...

இன்று வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/1.html

கோநா said...

@raja,
@ma.thi.sutha,
@hema,
@ananthi,
@praba,

-anaivarukkum mikka nanrikal.